×

பொள்ளாச்சி விவகாரத்தில் பார் நாகராஜனுக்கு தொடர்பு: புதிய வீடியோ வெளியானதால் உண்மை அம்பலம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜனுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கோவை எஸ்.பி பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது, 4 பேருக்கு மட்டுமே இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், நாகராஜனுக்கு தொடர்பு இல்லை என்ற முரணான கருத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சபரிராஜனிடன் இருந்த ஆபாச படங்களை நாகராஜன் தான் பரப்பியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில், திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 4 வீடியோக்கள் வெளியாகியிருந்தன. அந்த வீடியோக்களில் பார் நாகராஜனுக்கு தொடர்பு இருப்பதற்கான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சிகள் அம்பலமானதையடுத்து பார் நாகராஜன் தற்போது தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று வீடியோ ஒன்றை காவல்நிலையத்தில் அளித்து பார் நகராஜனையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும், அவரையும் கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பொதுமக்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பார் நாகராஜனின் மதுக்கூட்டத்தை சேதப்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பார் நாகராஜன் குறித்து மேலும் ஒரு வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரால் திருநாவுக்கரசு அடிவாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின.

அதில், பார் நாகராஜன் பெயரை திருநாவுக்கரசு உச்சரிக்கக்கூடிய அநத வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுபோன்று இந்த வழக்கில் பார் நாகராஜனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியபோதும் கூட இதுவரை அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பொள்ளாச்சியில் நேற்று வெளியான வீடியோவில் இருப்பது தாம் அல்ல என பார் நாகராஜன் கூறியுள்ளார். கோவையில், ஆட்சியரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் வெளியான வீடியோவில் இருப்பது நான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் அறிவுறுத்தலின் பேரில் சொந்த கிராமத்தில் தான் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Nagarajan , Pollachi, AIADMK leader, bar nagarajan, sexual abuse
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...