×

தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானை உலக அளவில் தனிமைப்படுத்த முயற்சி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: தீவிரவாதத்தை தொடர்ந்து  ஊக்குவிக்கும் பாகிஸ்தானை உலக அளவில் தனிமைப்படுத்த முயற்சி எடுத்து  வருகிறோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் மகளிர் தினவிழா,  ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கூட்டமைப்பின் முதன்மை தலைமை அதிகாரி அனுபமா சிவராமன் தலைமை தாங்கினார். தென்னிந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பு (சிக்கி) தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:
பெண்கள் முன்னேற்றம் குறித்த காலத்தில் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  பல்துறைகளில் சத்தமே இல்லாமல் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்களை உலகுக்கு அடையாளப்படுத்தும் வகையில், விழா எடுத்து கவுரவிக்க வேண்டும். இப்படி செய்வதின் மூலம் மகளிர் முன்னேற்றத்தை இன்னும் மேம்படுத்த முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய பல்வேறு உதவி மையங்கள் இயங்கி வருகிறது.

பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் குறிப்பாக இளம் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை முன்னேற்றம் அடைய வைக்க முடியும். இந்த பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடலாம். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. எனவே தீவிரத்தை  ஊக்குவிக்கும் அந்த நாட்டை உலகளவில் தனிமைப்படுத்த முயற்சி எடுத்து  வருகிறோம். இந்த விவகாரத்தில் உலக நாடுகளும் நம்முடன் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.  நிதி உதவியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவம்  உதவுகிறது. புலவாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத  அமைப்புகளின் நிலைகள் மீது துல்லியமாக லேசர் ஆயுதங்களுடன் இந்திய படை  தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், காஷ்மீர் நடந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலை நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraman ,Pakistan ,speech , terrorism, Pakistan, Nirmala Sitaraman
× RELATED முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு...