×

செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது அரசியல் பண்பற்ற செயல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது அரசியல் பண்பற்ற செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைப்பதற்காக நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக பொருளாளர் துரைமுருகன் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் அளித்துள்ள பேட்டி அரசியல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லாதது வருத்தமளிக்கிறது.
கட்சி மாறுபாடுகள் இருந்தாலும்  தலைவர்கள் அரசியல் நாகரீகத்துடன் கருத்துக்கள் தெரிவிப்பதையே தமிழக மக்கள் விரும்புவார்கள்.

பத்திரிகையாளர்கள் அரசியல் தலைவர்களின் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான பணியினை ஆற்றி வருபவர்கள். ஆகவேதான், பத்திரிகையாளர்களை சந்திப்பதை அரசியல் தலைவர்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அத்தகைய ஊடகத்துறை நண்பர்களை நீ, வா, போ என ஒருமையில் பேசுவதும், வீட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என குறிப்பிடுவதும் அரசியல் பண்பற்ற போக்கு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reporters ,Pramalatha ,Marxist , Journalists, Premalatha, Marxist
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு