×

கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி: வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை

* ஒரு பிரதமர் என்பவர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருக்க வேண்டும்.
* கச்சத்தீவு குறித்து மோடியும், பாஜவும் உண்மையைப் பேசாமல் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.

சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி செய்துள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இதை வெளியிடுகிறார். பிரதமர் மோடி இதை சமூகவலைத்தளத்தில் பகிர்கிறார். இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது எனச் சொல்லும் ஒன்றிய பாஜ அரசு, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் எப்படி அந்த ஆவணங்களை கொடுத்தனர் எனத் தெரியவில்லை. அண்ணாமலைக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த ஆவணங்களை கொடுத்ததாக ஒரு அதிகாரி கையெழுத்திட்டுள்ளார்.

அவர் வெளியுறவுத் துறையில் பணியிலேயே இல்லை. பொய்யான தகவலை பாஜ மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை வெளியிடுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் இது தொடர்பாக பொதுவெளியில் பேசுகிறார். பிரதமர் மோடி அந்தக் கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிருகிறார். இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடுக்க உள்ளோம். ஒரு பிரதமர் என்பவர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருக்க வேண்டும். கச்சத்தீவு குறித்து மோடியும், பாஜவும் உண்மையைப் பேசாமல் மக்களை திசை திருப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, 4வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எங்களது வாழ்த்துகளை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டது. மக்களுக்காக சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கொண்டிருகிறார். சொன்னதையும், சொல்லாத வாக்குறுதிகளையும் மக்கள் நலனுக்காக புதுபுதுத் திட்டங்களாகத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம்

தெலங்கானா மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில உலக நாடுகளில் இந்த காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் அரசியல் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. மரணம் குறித்து காவல்துறையின் புலன் விசாரணைக்கு பிறகே எங்களுடைய கருத்தைத் தெரிவிப்போம்.  சென்னை கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டோம்.

நினைவிடத்தில் உள்ள தோட்டங்கள் சரி செய்யப்படும். தண்ணீர் வசதி செய்யப்படும் என்று அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். ‌காமராஜர் நினைவிடத்தை சீரமைப்பது குறித்து சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், உ.பலராமன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி: வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,BJP ,Kachchathivu ,Chennai ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...