×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் விட்டு மாவட்டம் பிடிஓ.க்கள், தாசில்தார்கள் இடமாறுதல் உத்தரவு ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி

சேலம்:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி  ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்பேரில் தமிழகத்தில் காவல்துறையில் எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள், கூடுதல் எஸ்பிக்கள், எஸ்பிக்கள், டிஐஜிக்கள் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிலும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கடந்த வாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், உதவிஇயக்குநர்களை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். மாநிலம் முழுவதும் 934 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 735தாசில்தார்கள், 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் என ஒட்டுமொத்தமாக 1700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்திலும், சொந்த ஊரிலும் பணியாற்றி வரும் அதிகாரிகளை அந்தந்த மாவட்டத்திற்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். மாறாக மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாற்றியதை ஏற்க முடியாது எனக்கூறி ஊராக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடமாறுதல் தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதத்தை தமிழக தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ளது. அதில், ஒரு மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3, 4 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளையும், சொந்த ஊரில் (சட்டமன்ற தொகுதிக்குள்) பணியாற்றும் அதிகாரிகளையும் மாவட்டத்திற்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாநில அளவிலான அதிகாரிகளை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தியது. இதன்காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றிய இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் கூறுைகயில், ‘‘பணி விதிகளின் படி மாவட்ட அலுவலர்களாக விளங்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்களை மாவட்டத்திற்குள்ளேயே மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், மாநில அளவிலான அலுவலர்களை மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மாற்றலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. இதனால், மாவட்ட இடமாறுதல் உத்தரவை அரசு ரத்து செய்துள்ளது. சேலத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட 37 பிடிஓக்களும், பழையபடி ஏற்கனவே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்ட புதிய பணியிடத்தில் பணியாற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BOTOs ,Thilasdars ,Parliamentary , Parliamentary Elections, District, District BTO, Thasildar, Election Commission
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...