×

மன அழுத்தத்தை போக்க 104 சேவையில் கூடுதல் மனநல மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

புதுக்கோட்டை: மனஅழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் 104 சேவை 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் 18 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மனநல மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொது தேர்வு நடைபெறுவதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் 104 சேவையில் கூடுதல் மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் மனநல மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் மாணவர்கள் மனஅழுத்தம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் 104 சேவையை அணுகலாம் என்றும் கூறியுள்ளார். மனநல சேவையை பொறுத்தவரை மனஅழுத்தம் உடையவர்களை ஊக்குவிக்கும் வகையில் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறினார்.

மேலும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் 104 சேவை 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் கூடுதல் மனநல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்வு முடிவுகள் வரும் சமயத்தில் மனநல சேவையை பலர் அணுகுவதாகவும், எனவே மக்களின் நலனுக்காக தொடர்ந்து இந்த சேவை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதே போல, இந்தியாவிலேயே இல்லாத அளவில் முதுகலை மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 508 இடங்கள் பெற்றிருப்பதாகவும்,  இது கிராமப்புற மாணவர்கள் முதுகலை மருத்துவ படிப்பு பயில்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister Vijayapaskar , மனநல மருத்துவர்கள்,நியமனம்,104 சேவை,அமைச்சர் விஜயபாஸ்கர்
× RELATED அமைச்சர் விஜயபாஸ்கரை போல் திமுக...