×

காடுவெட்டி குரு மகனின் கல்வி செலவை ஏற்போம்: ராமதாஸ் முகநூலில் கருத்து

சென்னை: காடுவெட்டி குரு மகனின் கல்வி செலவு முழுவதையும் ஏற்க தயாராக இருப்பதாக ராமதாஸ் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது: காடுவெட்டி குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி  ஓய்வுபெற்றவருமான கருணாகரன் நேற்று என்னை சந்தித்துப் பேசினார். காடுவெட்டி குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த  வருத்தமடைவதாகவும், இதுபோன்று நடக்கும் என்று தாம் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் கருணாகரன் மிகவும் மனம் நொந்து என்னிடம் கூறினார்.
குருவின் மகள் விருதாம்பிகையின் திருமணம் குறித்து, குருவின் மனைவிக்கும், தனக்கும் தெரியாது என்றும் வேதனையுடன் கூறினார். குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களை பறித்துக்கொள்ள  அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

குரு மீது மரியாதையும், அவரது குடும்பத்தினர் மீது அக்கறையும் கொண்டுள்ள கருணாகரன், என்னிடம் வேண்டுகோள் ஒன்றையும்  முன்வைத்தார். குருவின் மகன் கனலரசன் அவனது தவறுகளை உணர்ந்து திருந்திவந்து உங்களிடம் தஞ்சமடைந்தால் அவரின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதைக்கேட்ட நான், குருவின் மகன் மீது நானும், அன்புமணியும் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்தேன். குருவின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் கனலரசனை அழைத்து அன்புமணி, கல்வி மற்றும் எதிர்காலம்  குறித்து 2 மணி நேரம் பேசியதையும், குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிறப்பாக படித்து டாக்டராக ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கியதையும் தெரிவித்தேன். கனலரசன் திருந்தி வந்தால் அவரின் கல்வி  மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணியும் காத்திருப்பதாகவும் கருணாகரனிடம் உறுதியளித்தேன். இவ்வாறு ராமதாஸ் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kaduvetti Guru Son: Ramadoss , education, Kaduvetti, Guru Son, Ramadoss
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...