×

பாஜ, காங். அல்லாத அரசு தான் அமையும்: டிஆர்எஸ் கணிப்பு

ஐதராபாத்: ‘மக்களவை தேர்தலுக்கு பின் மத்தியில் பாஜ, காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் ஆட்சியமைக்கும்’ என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி (டிஆர்எஸ்) செய்து வருகிறது. இந்த கட்சி மத்தியில் பாஜ, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தொடர்பு கொண்டு சந்திரசேகர ராவ் பேசியுள்ளார். இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளை டிஆர்எஸ் கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்தலுக்கு பின் பாஜ, காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் ஆட்சியமைக்கும் என்று டிஆர்எஸ் செய்தி தொடர்பாளர் அபித் ரசூல்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அபித் ரசூல்கான் கூறியதாவது: வரும் மக்களவை தேர்தலில் டிஆர்எஸ் 16 தொகுதிகளை கைப்பற்றும். தேர்தலுக்கு பின் பாஜ, காங்கிரஸ் அல்லாத அரசு மத்தியில் அமையும். இதில் சந்திரசேகர ராவ் முக்கிய பங்காற்றுவார். டிஆர்எஸ் கட்சி மதசார்பற்ற கூட்டணி அமைக்க விரும்புகிறது. பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இதில் இடம் பெறாது. இந்த கூட்டணிக்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். பீகாரில் காங்கிரஸ் பிடியில் இருந்து வெளியேறினால் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். காங்கிரஸ் பாஜ கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். சந்திரசேகர ராவுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் வரும் நாட்களில் அரசியல் நிலவரம் மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TRS , Bhajah, congress. Non-governmental ,TRS prediction
× RELATED தெலங்கானாவில் நாளை இடைத்தேர்தல்...