×

காஷ்மீரில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை

டெல்லி : காஷ்மீரை மையமாக கொண்டு செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேச விரோத சக்திகள் மற்றும் பயங்கரவாத இயக்கங்களுடன் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பினர் தொடர்பு வைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து வருகின்றனர்.

பிரிவினைவாத அமைப்புகளை சேர்ந்த பலர் கைது

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு, இதற்கு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அனைத்தையும் திரும்பப் பெற்றது.

ஜமாத்-இ-இஸ்லாமி  இயக்கத்திற்கு தடை

இதைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில், அவர்களில் வீடுகளிலும் சோதனை செய்தனர். இதில் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த 12 நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, அங்கு செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி  இயக்கத்திற்கு இயக்கத்திற்கு இப்போது தடை விதித்துள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும் அந்த மாநிலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அந்த இயக்கத்திற்கு ஐந்து வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கம் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு நெருக்கமான இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir ,government , Jamaat-e-Islami, separatist organization, PM Modi
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...