×

ஒரு வருடமாகியும் ஜாமீன் வழங்கப்படவில்லை நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?

* உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தாதது ஏன்?
* சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை
* திருவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை
* ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி

மதுரை: நிர்மலாதேவி மீதான வழக்கில் ஒரு வருடமாக ஜாமீன் வழங்கப்படவில்லையே, அப்படியானால் அவர் சூப்பர் குற்றவாளியா? இவ்வழக்கில் ஆடியோவில் குறிப்பிட்டுள்ள உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட் கிளை நீதிபதிகள், திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலர் சுகந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதானார். மேலும், மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியும் கைதாயினர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை, அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமாக விசாரிக்காமல் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவரை திருவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே, திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘இவ்வழக்கில்

சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. நிர்மலாதேவி மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை வைத்து விசாரணையை முடித்துள்ளனர். நிர்மலாதேவி பேசிய ஆடியோவில், மாணவிகளிடம் உயரதிகாரிகள் என்று பேசியுள்ளார். ஆனால் சிபிசிஐடி போலீசார் இதனை வேண்டுமென்றே கருத்தில் கொள்ளாமல் இந்த மூன்று பேரை வைத்து வழக்கை முடிக்க நினைக்கின்றனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கூறியதாவது: நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. மேலும் அனைத்து விசாரணையும் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டனர். பின்பு ஏன் இன்னும் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை. அவரை வெளியே விடுவதில் அரசுக்கு என்ன அச்சம்?. நிர்மலாதேவி என்ன சூப்பர் குற்றவாளியா? அவர் மாணவிகளிடம் பேசும்போது உயரதிகாரிகள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த உயரதிகாரிகள் யார்? அவர்களிடம் ஏதும் விசாரணை நடத்தப்பட்டதா? மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் கமிட்டியின் அறிக்கை யாரிடம் உள்ளது?. அதன் நிலைப்பாடு என்ன? சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே இதனடிப்படையில் நடைபெறும் திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பின்னர், மனு குறித்து சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 18க்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi Bail
× RELATED இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை...