×

குஜராத் அருகே டெர்பி ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் உளவு பார்க்கும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

காந்திநகர் : குஜராத்தின் கட்ச் பகுதியில் அப்தசா கிராமத்தில் பாகிஸ்தானை சேர்ந்த உளவு பார்க்கும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் டெர்பி ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவுபார்க்கும் கருவிகளை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் ஸ்பைடர் என்ற பாதுகாப்பு முறையில் இயங்கும் டெர்பி ஏவுகணையை முதல்முறை பயன்படுத்தி ட்ரோன் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது.

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3:30 மணி அளவில் மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் 1,000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்துள்ளனர். பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இருந்து முகாம்களை விமானப்படை குறி வைத்து தகர்த்துள்ளது. 12 போர் விமானங்கள் எல்லையை தாண்டி சென்று விமானப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே குஜராத் மாநிலம் கட்ச் அருகே பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டது.

ஸ்பைடர் என்ற பாதுகாப்பு முறையில் இயங்கும் டெர்பி ஏவுகணையை முதல்முறை பயன்படுத்தி இந்த ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டது. ஸ்பைடர் என்ற பாதுகாப்பு முறையானது 15 கி.மீ தொலைவில் வரக்கூடிய விமானங்கள், ஏவுகணைகளை தன்னிச்சைக்காக கண்டறிந்து அழிக்கும் திறன் பெற்றவையாக காணப்படுகிறது. இதேபோல் தரையிலிருந்து 20 மீட்டர் முதல் 9000 மீட்டர் தூரத்திற்கு வரக்கூடிய எந்தவொரு ஏவுகணை, ஆளில்லா விமானங்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் திறனையும் கொண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் 18 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட்ட டெர்பி ஏவுகணையானது இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியதாகும்.

இந்நிலையில், இந்த ஏவுகணையானது முதன்முறையாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள அதிகாரிகள் பணிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிகழ்வுகளுக்கும் தயார் நிலையில் இருக்குமாறு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 72 மணி நேரத்திற்கு உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,Derby ,Gujarat , Gujarat, Derby missile, Pakistan drone, Indian Air Force
× RELATED குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.602...