×

குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு

* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தனர்

புதுடெல்லி: கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 93 தொகுதிகளில் 3ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 63.13 சதவீத வாக்குகள் பதிவாகின. அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

முதல் 2 கட்ட தேர்தலில் 190 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உபி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 93 தொகுதிகளுக்கான 3ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 25 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், அகமதாபாத்தின் ரனிப் பகுதியில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

பொதுமக்கள் பலரும் குவிந்து பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களைப் பார்த்து கை அசைத்த மோடி, சிலருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். கூட்டத்தில் இருந்த ஒரு பெண் குழந்தையை அவரது தாயிடமிருந்து பெற்று தூக்கி மகிழ்ந்தார். பெண்மணி ஒருவர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி விட்டார். அதைத் தொடர்ந்து வாக்களித்த மோடி, பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார். தேர்தலை அமைதியாக நடத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

இதே போல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தின் நரன்புரா பகுதியில் தனது மனைவி, மகன் ஜெய்ஷா உடன் வந்து வாக்களித்தார். இவ்விரு பகுதிகளுமே காந்திநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டவை. காந்திநகர் தொகுதி எம்பியான அமித்ஷா மீண்டும் அதே தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். குஜராத் முன்னாள் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோர் சிலஜ் பகுதியில் வாக்களித்தனர். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தனது கணவர் யாகூல் ரசூல் உடன் தேவ்கத் பரியா பகுதியில் வாக்களித்தார்.

அதானி குழும தலைவர் கவுதம் அதானியும் அகமதாபாத்தில் வாக்களித்தார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் முடிந்த நிலையில், எஞ்சிய 14 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் வந்து வாக்களித்தனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகனும் ஷிமோகா மக்களவை தொகுதி பாஜ வேட்பாளருமான பி.ஒய்.ராகவேந்திரா உடன் ஷிகாரிபுராவில் வாக்களித்தார்.

மகாராஷ்டிராவில் பாரமதி தொகுதியில் மாலேகான் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அவரது மகளும் பாராமதி தொகுதி எம்பியுமான சுப்ரியா சுலேவும் வாக்களித்தார். இத்தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், சுப்ரியாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அஜித் பவார் மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோர் பாரமதியின் கடேவாடி பகுதியில் வாக்களித்தனர்.

சுப்ரியா சுலே வாக்களித்தபின், அஜித் பவார் வீட்டிற்கு சென்று அவரது தாயிடம் ஆசி பெற்றார். உபியில் மெயின்புரி தொகுதிக்கு உட்பட்ட சைபை பகுதியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மனைவி டிம்பிள் யாதவுடன் வந்து வாக்களித்தார். இத்தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது மனைவி, மகளுடன் பார்பெட்டா மக்களவைத் தொகுதியில் உள்ள அமிங்கானில் வாக்களித்தார்.

கவுகாத்தி, பர்பேட்டா, துப்ரி மற்றும் கோக்ரஜார் தொகுதிகளில் மழைக்கு மத்தியில், படகு உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில், 3ம் கட்ட தேர்தலில் சராசரியாக 63.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக அசாமில் 76.68 சதவீத வாக்குகளும், கோவாவில் 74.52 சதவீதம், மேற்கு வங்கத்தில் 73.96 சதவீதம், மகாராஷ்டிராவில் 60.33 சதவீதம், பீகார் 57.96 சதவீதம், குஜராத் 57.36 சதவீதம், கர்நாடகாவில் 69.49 சதவீதம், உபியில் 57.34 சதவீதம், சட்டீஸ்கரில் 68.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அடுத்த 4 கட்ட தேர்தல்கள் முறையே மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 தேதிகளில் நடைபெறும். ஜூன் 4ம் தேதி எண்ணப்படும்.

* சகோதரரை சந்தித்த மோடி
பிரதமர் மோடி வாக்களித்த நிஷான் பள்ளிக்கு அருகே அவரது சகோதரர் சோமபாய் மோடியின் வீடு உள்ளது. இதனால் மோடியை சந்திக்க சோமபாய் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தார். அப்போது அவரிடம் மோடி வந்ததும் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். பின்னர் சோமபாய் அளித்த பேட்டியில், ‘‘ஓட்டுப்பதிவின் போது ஒவ்வொரு முறையும் சகோதரர் மோடி வீட்டிற்கு வந்து எங்கள் தாயை சந்தித்து ஆசி பெறுவார். இன்று எங்கள் தாய் இல்லை. ஆனாலும் அவர் சொர்க்கத்தில் இருந்தபடி மோடி வெற்றி பெற வாழ்த்துவார். இப்பகுதி மக்களை போல நானும் மோடி 3வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டுமென விரும்புகிறேன்’’ என்றார்.

* கடைசி கட்ட தேர்தல் மனுதாக்கல்
கடைசி மற்றும் 7ம் கட்ட மக்களவை தேர்தல் 8 மாநிலங்களில் 57 தொகுதிகளில் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் உபியின் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 14ம் தேதி. 15ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 17ம் தேதி.

* முஸ்லிம்களை விரட்டிய உபி போலீஸ்
உ.பி பல பகுதிகளிலும் முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். சம்பல் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அஸ்மவுலி கிராமத்தில் உள்ள பூத் எண் 181, 182, 183, 184 ஆகியவற்றில் முஸ்லிம் வாக்காளர்களை போலீசார் வாக்களிக்க விடாமல் தடுத்ததாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வாக்களிக்க கொண்டு வந்த ஆதார் அட்டைகளை போலீசார் பறித்தாகவும் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். வாக்களித்த பின் பேட்டி அளித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘மெயின்புரியில் பாஜ தொண்டர்கள் வாக்குச்சாவடிகளை சூறையாட முயற்சித்தனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை காவல் நிலையங்களில் தடுத்து வைத்து வாக்களிக்க விடாமல் செய்துள்ளனர்’’ என்றார்.

* இன்னும் பாக்கி 260 தொகுதிகள்
ஏப்ரல் 19ம் தேதி நடந்த முதல் கட்ட மக்களவை தேர்தலில் 102 தொகுதிகளிலும், 2ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. நேற்றைய 3ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தது. இதுவரை 3 கட்ட தேர்தலில் 283 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தலில் 260 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

* மேற்கு வங்கத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் முர்ஷிதாபாத் மற்றும் ஜாங்கிபூர் தொகுதிகளில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ மற்றும் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மோதிக் கொண்டதால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. முர்ஷிதாபாத்தில் வன்முறைக்கு நடுவேயும் அதிகபட்சமாக 76.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

* தேர்தல் புறக்கணிப்பு
உபி மாநிலம் புடானில் உள்ள தோரன்பூர் கிராம மக்கள் தங்களின் சாலை அமைப்பதற்கான கோரிக்கையை நிறைவேற்றாததைக் கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர். இதே போல, பிரோசாபாத் பகுதியை ஒட்டிய நாக்லா ஜவஹர், நீம் கெரியா மற்றும் நக்லா உமர் ஆகிய கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வராததால் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.

The post குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Karnataka ,PM Modi ,Home Minister ,Amitsha ,Congress ,President ,Karke ,New Delhi ,3rd phase elections ,Maharashtra ,phase election ,Dinakaran ,
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...