×

கோடை தொடங்கும் முன்பே தமிழகத்தின் 6 நகரங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: வீட்டில் இருந்து வெளியேவர முடியாமல் மக்கள் அவதி

சென்னை: கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, வானிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 6 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. மார்ச் முதல் வாரம் வரை இது நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமிழகத்தில் மழை முற்றிலும் பெய்யவில்லை. ஜனவரி மாத இறுதி வரை பனிப்பொழிவால் காலம் கடந்தது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகம், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இயல்பு வெப்பமான 89.6 டிகிரி என்று கடந்த வாரம் வெயில் நிலவியது. இருப்பினும் இரவில் குளிரும் நீடித்தது.

இந்நிலையில், நாட்டின் வட பகுதியில் நிலவும் வளிமண்டல காற்றுச்சுழற்சி காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் தென் பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது.  குறிப்பாக, ஆந்திர கடலோரப் பகுதி, தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் இயல்பு நிலையைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும், தமிழகத்தின் உள் மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் அதிகரித்துள்ளது. பொதுவாக தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனந்தபூர், கடப்பா, கர்னூல், திருப்பதி ஆகிய நான்கு இடங்களில் 104 டிகிரி வரை வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சேலம், வேலூர், திருத்தணி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 100 டிகிரியை தொட்டுள்ளது.  சென்னையில் 95 டிகிரி வரை வெயில் அதிகரித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெயிலால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சராசரியாக 90 டிகிரியை தாண்டியுள்ளது. கோடை காலம் தொடங்க இன்னும் 60 நாட்கள் உள்ள நிலையில் இப்போதே, வெயில் கொளுத்த தொடங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : start ,cities ,Tamilnadu ,house , Summer, Tamilnadu, 100 Degree Ways
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...