×

சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் பிரச்னைகளை போக்க புதிய வசதி: தமிழக அரசு அறிமுகம்

சென்னை: சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களிடையே ஏற்படும் பிரச்னைகளை போக்குவதற்காக தமிழக அரசு புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017’ மற்றும் அதற்கான விதிகள் சட்டத்தை மக்கள் எளிதாக பின்பற்றுவதற்காக www.tenancy.tn.gov.in என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார். இந்த வலைதளத்தில், சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு இச்சட்டத்தின் கீழ் வருவாய் கோட்ட அளவில், வாடகை அதிகார அமைப்பு ஏற்படுத்தி அதனை செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்திற்கு குறையாத அலுவலர் அரசின் முன்அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படுவார். இந்த புதிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்தின் மூலமே அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். இந்த புதிய தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017 புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

கிளாம்பாக்கத்தில் 394 கோடியில்  புறநகர் பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது  நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தெற்கு நோக்கி செல்லும்  புறநகர் பேருந்துகளுக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம்  காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் 44.74 ஏக்கர்  நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ள புதிய  புறநகர் பேருந்து நிலையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த  புதிய பேருந்து நிலையம், சுமார் 6,40,000 சதுர அடி கொண்ட கட்டுமானத்துடன்  அமைக்கப்பட உள்ளது.

பேருந்து நிலையம், சுமார் 1,50,000 பயணிகள் பயன்பெறும்  வகையிலும், 250 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடிய வகையிலும், 270  கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்கள்  நிறுத்தும் வசதியுடன், எரிபொருள்  நிரப்பும் நிலையம், புறக்காவல் நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,  குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணை மின் நிலையம், தாய்ப்பாலூட்டும்  அறை, முதலுதவி மையம், மருந்தகம், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான  ஓய்வறைகள், பயணிகளுக்கான காத்திருக்கும் அறை, பயணிகள் ஓய்வறை மற்றும்  கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Property Owner ,facility ,Government ,Tamil Nadu ,Introduction , Property Owner, Tamil Nadu Governmentnt
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...