×

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு? பாஜ, சிவசேனா இடையே புதிய மோதல் வெடித்தது: தர்மசங்கடத்தில் கட்சி தலைவர்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜ இடையே கூட்டணி ஏற்பட்டுவிட்டாலும் அவ்விரு கட்சிகளிடையேயான மோதல் முற்றுப்பெறுவதாக இல்லை. மத்திய அரசை சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னா மூலம் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், முதல்வர் பதவி தொடர்பாக  இரு கட்சிகளிடையே வெளிப்படையாக மோதல் வெடித்துள்ளது. சிவசேனா-பாஜ இடையே கடந்த 18ம் தேதியன்று அமித்ஷா முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் சிவசேனா 23 தொகுதிகளிலும் பாஜ 25 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டது. கூட்டணியில்  உள்ள இரண்டு சிறிய கட்சிகளுக்கு பாஜ தனது பங்கில் இருந்துதான் தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதால், பாஜ.வால் 23 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும்.

சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை இரு கட்சிகளும் சரிபாதி தொகுதிகளை அதாவது தலா 144 இடங்களை பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வராக பதவியேற்கப் போவது  யார் என்பது குறித்து இருகட்சித் தலைவர்களிடையே மோதல் ஆரம்பித்துள்ளது. இதுபற்றி நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த  தலைவரும் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ராம்தாஸ் கதம், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகாலம் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள பாஜ சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனையை மீறினால் பாஜ உடனான கூட்டணியை சிவசேனா உடனடியாக முறித்துக் கொள்ளும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

ராம்தாஸ் கதமின் இந்த பகிரங்க எச்சரிக்கை கூட்டணியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் பாஜ வட்டாரத்தை கடும் அதிருப்தியடையவும் செய்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும் வருவாய்த்துறை அமைச்சருமான சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் முதல்வர் பதவிக்கு  உரிமை கோரும்’’ என்று ராம்தாஸ் கதமுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chief minister ,Maharashtra ,confrontation ,party leaders ,Bhaj ,Shiv Sena , Maharashtra, Chief Minister, Bjp, Shiv Sena
× RELATED சொல்லிட்டாங்க…