×

பாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா?

சென்னை: பாமக மற்றும் பாஜகவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அமைச்சர்கள் விட்டுக் கொடுக்காததால், முடிவு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. அதன்படி, சென்னை அடையாறு நட்சத்திர ஓட்டலில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து பாஜ தரப்பில் மத்திய அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கூட்டணி உருவானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையே தேமுதிகவுடனும் அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீட் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதற்கு காரணம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து 14 இடங்களில் போட்டியிட்டது. தற்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 3 இடங்களே தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. பாஜகவின் வற்புறுத்தலால், கூடுதலாக ஒரு சீட் என 4 சீட் வழங்கலாம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அக்கட்சியின் துணை பொது செயலாளர் சுதீஷ் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர். தமிழகத்தில், ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. அவர்களுக்கு 8 சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ள தேமுதிகவுக்கு கண்டிப்பாக அதைவிட ஒரு சீட் அதிகம், அதாவது 9 சீட் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதிமுக தரப்பில் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெரும்பாலானோர் அதிமுக கூட்டணியில் அதிக சீட் கேட்டு பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். சிலர், அப்படி சீட் தரவில்லை என்றால் டிடிவி கட்சியுடன் கூட்டணி சேருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.   இந்நிலையில், தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாஜ தரப்பினர் விலகிக்கொண்டனர். அதிமுக மூத்த அமைச்சர்களே தேமுதிக கூட்டணி குறித்து பேசி, இறுதி செய்து கொள்வதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று தேமுதிக முன்னணி தலைவர்களுடன் அதிமுக மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழகத்தில் பாஜ மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. அதை சமாளிப்பதற்காகத்தான் பாமக சேர்ந்துள்ளது. ஆனால் அக்கட்சிக்கு வட மாவட்டங்களில்தான் செல்வாக்கு. மற்ற மாவட்டங்களில் ஓட்டுக்கள் வாங்க வேண்டும் என்றால் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால்தான் அதிமுக கணிசமான ஓட்டுக்களை பெற முடியும். விஜயகாந்த் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்குத்தான் தேமுதிக தொண்டர்கள் ஓட்டுப் போடுவார்கள். இதனால்தான் தேமுதிகவும் பிடிவாதமாக உள்ளது.  ஆனால், சீட்டை குறைத்துக் கொண்டு, தேமுதிகவுக்கு தேர்தல் செலவுக்கான பணத்தை அதிகமாக தருவதாக அமைச்சர்கள் தரப்பில் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீட்டை குறைத்துக் கொண்டு செலவுக்கான பணத்தை அதிகமாக வாங்குவதா அல்லது பணத்தை குறைத்துக் கொண்டு சீட்டை அதிகமாக வாங்குவதா என்ற குழப்பத்தில் தேமுதிக தலைவர்கள் உள்ளனர்.

இரு தரப்பிலும் முடிவுகளை எடுக்காததால், கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நிலவுகிறது. அதே நேரத்தில் அதிக சீட் கேட்டால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல கட்சிகளை அதிமுக அணியில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது.   

5 பேர் கொண்ட குழு
கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச தேமுதிக தரப்பில் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பில், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , pmk,dmdk,admk,bjp
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...