×

தங்கம் விலை கிடு,கிடு உயர்வு தமிழகத்தில் சவரன் ரூ.25,808க்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் தங்கத்தின் விலை கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.25,808க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் முதலே தொடர்ந்து உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி முதல் தங்கத்தின் விலை மேலும் உயர ஆரம்பித்தது. அப்போது, ஒரு சவரன் தங்கம் ரூ.25,128க்கு விற்பனை செய்யப்பட்டது.அதேபோல், 14ம் தேதி ரூ.25,160க்கும், 15ம் தேதி ரூ.25,384க்கும், 16ம் தேதி ரூ.25,520க்கும் விற்பனையானது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதன்பிறகு மார்க்கெட் 18ம் தேதி மீண்டும் தொடங்கியது. அப்போது சவரன் ரூ.25,568க்கும், 19ம் தேதி சவரன் ரூ.25,688க்கு விற்கப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.25,808க்கு விற்பனையானது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தங்கத்தின் விலை உயரும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அமெரிக்காவில் தொடர்ந்து நிதி பற்றாக்குறை, தொழிலாளர்கள் போராட்டத்தால்,  அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்துள்ளனர். அவர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் உலகச்சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்னும் தங்கம் விலை உயரத்தான் வாய்ப்புள்ளது. இந்த மாதம் மட்டும் அல்லாது அடுத்த மாதமும் தங்கத்தின் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hike ,Kudu ,Tamilnadu Savane , Gold Price, Tamilnadu, Sawaran
× RELATED “தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை...