×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பிச்சுமணி நியமனம்

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பிச்சுமணியை நியமித்து தமிழக கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கரின் பதவி பிப். 15ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. இதையொட்டி ஜனவரி மாதத்  துவக்கத்தில் துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பி.இளங்கோவன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள்  துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன், யுஜிசி முன்னாள் தலைவர் வேத் பிரகாஷ் கொண்ட துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டது.  பேராசிரியர்கள் உட்பட  100க்கும் மேற்பட்டவர்கள்  வி்ண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. தமிழகத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மட்டுமே துணை வேந்தர் ஆக முடியும் என்ற நிலை இருந்தது. தமிழகத்தில் பன்வாரிலால் புரோகித் கவர்னராக  நியமிக்கப்பட்டது முதல், காலியாக இருந்த துணை வேந்தர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.

 முழுக்க முழுக்க கல்வித்தகுதி  அடிப்படையிலேயே நிரப்பப்படுகிறது. அதற்காக பாஜ நிர்வாகிகளையும் பலர் அணுகியதாக கூறப்படுகிறது. பணியில் உள்ள பேராசிரியர்களில் ஒருவர் துணை  வேந்தராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பேராசிரியர் பிச்சுமணி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக கவர்னரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்  வேந்தருமான பன்வாரிலால் புரோகித், முனைவர் பிச்சுமணியை அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்துள்ளார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு  இந்த பதவியில் நீடிப்பார். 37 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள முனைவர் பிச்சுமணி, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின்கீழ்  மூத்த பேராசிரியராக உள்ளார்.

அவர் தைபேயில் உள்ள அகாடமி ஆப் சினிகா, ஜப்பானில் உள்ள டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்வி  நிறுவனங்களில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தில் மிகுந்த அனுபவம் உள்ள இவர் மதுரைக்காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராகவும், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்,  செனட் குழுக்களில் பல்கலைக்கழக வேந்தரின் நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார். மூன்று புத்தகங்களை எழுதியுள்ள இவர், 190 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்துள்ளார். 2016ம் ஆண்டு, பல்கலைக்கழக மானியக் குழுவில் ஓய்வு பெற்ற  பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் மூத்த விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார்.இவ்வாறு கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pichimanni ,Vice-Chancellor ,Manonmaniam Sundaranar University , Manonmaniam Sundaranar University, Vice Chancellor Pichumani, Appointment
× RELATED உதவி பேராசிரியர் பணிக்கான...