×

பல நூறு கோடி முறைகேடுகளை மறைக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தகவலை பதிவேற்றாத மாநகராட்சி: 2 மாதமாக இணையதளத்தில் தீர்மானங்கள் மறைப்பு

சிறப்பு செய்தி: சென்னை மாநகராட்சியின் மாமன்ற தீர்மானங்கள் இரண்டு மாதங்களாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத காரணத்தால் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைக்க மாநகராட்சி முயல்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பல நூறு கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியில் எந்த பணிகள் செய்ய வேண்டும் என்றாலும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றித்தான் செய்ய முடியும். அதாவது மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு சிறிய கட்டிடத்தை இடிப்பது முதல் பல கோடி மதிப்புள்ள பணிக்கு பணியை செய்ய அனுமதி ஆணை வழங்குவது உள்ளிட்ட எந்தவொரு பணியை செய்வது என்றாலும் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் செய்ய முடியும்.தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம் நடைபெறும். இந்த மாமன்ற கூட்டத்திற்கு முன்பு வார்டு குழுக்களின் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படும். நிலைக்குழுக்கள் அவற்றை பரிசீலனை செய்து மாமன்றத்திற்கு அனுப்பும். இவைகள் மாதந்திர மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்பு தீர்மானமாக நிறைவேற்றப்படும்.

இந்த தீர்மானங்கள் மாநகராட்சியின் கரூவூலத்தில் ₹100 செலுத்தி பொது மக்கள் உள்ளிட்ட யார் வேண்டும் என்றாலும் பெற்றுக் கொள்ளலாம்.இந்நிலையில் மாநகராட்சியின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக மா.சுப்பிரமணியம் மேயராக இருந்தபோது மாமன்ற தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை 2007 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாமன்ற தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெறமால் சிறப்பு அதிகாரி அனுமதியுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி சம்பந்தபட்ட துறைகள் தீர்மானத்தை தயார் செய்து சிறப்பு அதிகாரிக்கு அனுப்புவார்கள். அவர் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிப்பார். இப்படி ஒரு மாதம் முழுவதும் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அந்த மாத கடைசியில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் நிதி ஒதுக்கீடு, பணி அனுமதி, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைக்க சென்னை மாநகராட்சி முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக பணி அனுமதி, நிதி ஒதுக்கீடு போன்ற வகையில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதை மறைக்கவே இந்த பதிவேற்றம் செய்யாமல் விடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எங்கே 916
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அந்த மாதம் 22 ம் தேதி மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 896 முதல் 936 வரையுள்ள அந்த தீர்மான தொகுப்பில் 916 வது தீர்மானம் மட்டும் காணாமல் போய் உள்ளது. இந்த தீர்மானம் எது தொடர்புடையது என்பதை மாநகராட்சி அதிகாரிகள்தான் விளக்க வேண்டும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Corporations , Hide several, funds,uploaded , Website resolutions
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு