×

மக்களை பற்றி கவலை இல்லை வருமானம்தான் அரசுக்கு குறிக்கோள்: சுகந்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று ஆங்காங்கே மாதர் சங்கம் சார்பில் பூட்டு போடும் போராட்டம் நடத்தி வருகிறோம். இதனாலேயே எங்கள் அமைப்பை சேர்ந்த பெண்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.  பொதுவாக டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு வைத்து மது விற்பனை செய்து வருகிறது. இதே போன்று ரேஷன் கடைகளில் இலக்கு வைத்து எல்லோருக்குமான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று பார்த்தால் கிடையாது.  இந்த டாஸ்மாக் கடைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். பல வீடுகளில் அப்பா மாலை வீட்டுக்கு எந்த கோலத்தில் வருவாரோ என நினைத்து பல குழந்தைகள் நடுங்கி சாகும் நிலை இருக்கிறது. நாங்கள் சமீபத்தில் குடிபோதையால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான மாநாடு நடத்தினோம். அதில், 6 ஆயிரம் பேரை சந்தித்தோம்.  அதில் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் அம்மா, மனைவி, குழந்தைகளை வரவழைத்தோம். அந்த மாநாடு எங்களை கண்கலங்க வைத்தது.

சில குழந்தைகள் இந்த மாநாட்டில் எங்களது அப்பா மிகவும் அன்பானவர், மாலையில் எப்படி வருவார் என்பது தெரியவில்லை. இதனால், மாலையில் அவர் வருவதற்கு முன்பு நாங்கள் ஒளிந்து கொள்வோம். அவர், குடிபோதையில் சாப்பிட்டு படுத்தால் சரி. இல்லையெனில் தகராறு செய்வார் என்று அழுது கொண்டே கூறினார்கள். சிலரது மனைவிமார்கள் நித்தம் நித்தம் மன போராட்டத்தை சந்தித்து வருகிறோம். எனது கணவர் செத்தால் கூட பரவாயில்லை என்று கூறினார்கள். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. அவர்களுக்கு வருமானம் தான் இலக்கு. இந்த சமூகத்தில் வாழும் மக்களை பற்றி கவலை இல்லை. அதே நேரத்தில் தேர்தல் வந்தால் பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர்.  21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மது தரக்கூடாது என்று நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். நிறைய டாஸ்மாக் கடைகள் பக்கத்தில் வட்டிக்கு அதிகமாக பணம் விடுபவர்கள் நிற்கிறார்கள்.

அவர்கள், டாஸ்மாக் கடையில் குடிக்க வருபவர்களுக்கு பணம் கொடுத்து, அந்த இடத்தை வியாபாரம் செய்யும் மையமாக்கி விட்டனர். சம்பாதித்ததும் பத்தாது என்று வட்டிக்கு கடன் வாங்கி குடிக்கின்றனர். அப்படி தங்களது உழைப்பை முழுவதும் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் இன்று பலர் உள்ளனர். ஒட்டுமொத்தமாக சமூகத்தை சீரழிக்கின்றனர். விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதுவும் இளம் விதவைகள் ஏராளமான பெண்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே 17 லட்சம் விதவைகளுக்கான பென்ஷனை நிறுத்தி வைத்து விட்டனர். ஒருபக்கம் விதவைகள் உருவாக காரணம் அரசாங்கம் தான். இன்னொரு பக்கம் விதவைகளுக்கு பென்ஷன் கொடுப்பதை குறைப்பதும் அரசாங்கம் தான். இதை எதிர்த்தும் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் மதுகடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க  அரசே மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,state general secretary , People, Income, Government, Objective, Suganthi, Secretary of State for All India Democracy
× RELATED மழையால் பாதித்த பயிர்களுக்கு...