×

உடுமலை அருகே போக்கு காட்டும் சின்னதம்பி யானையை விரட்ட இன்னொரு கும்கி வருகிறது

உடுமலை: உடுமலை அருகே அட்டகாசம் செய்து வரும் சின்னதம்பி யானையை விரட்ட இன்ெனாரு கும்பி வருகிறது. கோவையில் பிடிபட்ட சின்னதம்பி யானையை டாப் சிலிப்பில் கொண்டு விட்டனர். ஆனால் அந்த யானை அங்கிருந்து கிளம்பி உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்துக்கு வந்தது. அங்குள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது. சுமார் 6 நாட்களாக அங்கு முகாமிட்டிருந்த யானையால் ஆலை பணிகள் பாதிக்கப்பட்டன. யானையை வனத்துக்குள் விரட்ட கோரி போராட்டங்களும் வெடித்தன.இந்த நிலையில் சின்னதம்பி யானை கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெளியேறி செங்கழனிபுதூர், மடத்துகுளம், கண்ணாடிபுதூர் கிராம பகுதிகளுக்குள் நுழைந்தது. அங்குள்ள கரும்புக்காடு, வயல் வெளிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இது விவசாயிகளை அச்சப்படுத்தியது. சின்னதம்பி யானையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 30 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

சின்னதம்பி யானை எங்கெங்கு செல்கிறது என்று கண்காணித்து வருகிறார்கள். சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மாரியப்பன், கலீல் ஆகிய 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. அந்த யானைகள் மூலம் நேற்று மீண்டும் சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணி நடந்தது. ஆனால் வனத்துக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக சின்னதம்பி யானை போக்கு காட்டியது. நேற்று நள்ளிரவில் சின்னதம்பி யானை கண்ணாடிபுதூரில் இருந்து வெளியேறி நீலம்பூர் என்ற கிராம பகுதிக்கு வந்தது. பின்னர் கரும்புக்காட்டுக்கு சென்றுவிட்டது. சின்னதம்பியை விரட்டியடிக்க வரவழைக்கப்பட்டிருந்த மாரியப்பனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு ஓய்வு அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். சின்னதம்பியை விரட்ட சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை இன்று வர உள்ளது.

சின்னதம்பியை காண அலைமோதும் கூட்டம்
கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை பார்ப்பதற்காக செங்கழனிபுதூர், கிருஷ்ணாபுரம், மடத்துகுளம், கண்ணாடிபுதூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அங்குள்ள தோட்ட பகுதிகளில் ஐஸ்கிரீம், கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் தற்காலிக கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். இந்த கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumki ,Chinnathambi ,Udumalai , Udumalai, Chinnathambi Elephant,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு