×

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை : சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என வனத்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் சுற்றித் திரியும் சின்னதம்பி யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த 28ம் தேதி கோவையில் வனத்துறையினரால் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை டாப்சிலிப்பை அடுத்த வரகலியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில், சுமார் 150 கி.மீ. தொலைவை கடந்து மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ, தொலைவில் அமைந்துள்ள முட்புதர் நிறைந்த குட்டை பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.

இதையடுத்து சின்னதம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட 4வது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானை கலீம் வரவழைக்கப்பட்டது. ஆனால் கும்கி யானை கலீமை நண்பனாக்கி சின்னதம்பி அதனுடன் நீண்ட நேரமாக விளையாடியுள்ளது. மேலும் அங்குள்ள சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்புக் காட்டில் இரையை தேடிய பிறகு மீண்டும் புதருக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக சின்னதம்பி யானை புதரிலேயே இருந்து வருகிறது.

70 பேர் கொண்ட வனத்துறையினர் இரவு, பகலாக யானையை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் வலுத்தன. மேலும் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் அரசுக்கோ, வனத்துறைக்கோ இல்லை என தமிழக அரசு மற்றும் வனத்துறை சார்பில் கூறப்பட்டது. மேலும் சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பவே இரண்டு கும்கி யானைகள் மூலம் கண்காணித்து வருவதாகவும், யானையை பத்திரமாக வனத்துக்குள் அனுப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumaon ,Chinnathampi ,High Court ,Tamil Nadu , Chinnathambi Yanai, Kumki, High Court, Tamil Nadu Government, Forest Department
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...