×

உடுமலையில் 4வது நாளாக சின்னதம்பி யானை முகாம் : கும்கிகளை நண்பர்களாக்கி, மக்களின் மனம் கவர்ந்த நாயகனானது!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் சுற்றித் திரியும் சின்னதம்பி யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், யானையை வனத்துக்குள் விரட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட கும்கி யானைகளான கலீம் மற்றும் மாரியப்பன் யானைகளை, சின்ன தம்பி யானை நண்பர்களாக்கி அவைகளுடன் விளையாடி வருகிறது. கடந்த 28ம் தேதி கோவையில் வனத்துறையினரால் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை டாப்சிலிப்பை அடுத்த வரகலியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், சுமார் 150 கி.மீ. தொலைவை கடந்து மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ, தொலைவில் அமைந்துள்ள முட்புதர் நிறைந்த குட்டை  பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது. இதையடுத்து சின்னதம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட 4வது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானை கலீம் வரவழைக்கப்பட்டது. ஆனால் கும்கி யானை கலீமை நண்பனாக்கி சின்னதம்பி அதனுடன் நீண்ட நேரமாக விளையாடியுள்ளது.

மேலும் அங்குள்ள சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்புக் காட்டில் இரையை தேடிய பிறகு மீண்டும் புதருக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக சின்னதம்பி யானை புதரிலேயே இருந்து வருகிறது. 70 பேர் கொண்ட வனத்துறையினர் இரவு, பகலாக யானையை கண்காணித்து வருகின்றனர். தம்மை பிடிக்க வந்த கும்கி யானைகளையும் நண்பர்களாக்கிவிட்டதால் சின்னதம்பி யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியை விட்டு யானை வெளியேறினால் அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும், அதுவரை யானையை பாதுகாக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னதம்பி யானையை காண நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே சின்னதம்பியை கும்பி யானையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்வேறு நபர்கள் சேவ் சின்னதம்பி என்ற ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வளைதளங்களில் சின்னதம்பி யானையை பாதுகாக்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnatambi Elephant Camp ,Udumalai ,Friends , Udumalai, Chinnathambi Elephant, Kumki Elephants, Forest Department
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு