×

T20 இடைத்தேர்தல்...... திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சிதற தொடங்கியது. முதலில் ஓபிஎஸ், தினகரன் அணியாக பிரிந்தது. பின்னர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஓரணியாகவும் தினகரன் எதிர் அணியாகவும் மாறினர். சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். ஆனால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்  என்றும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தத் தடையில்லை  என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம்,  சாத்தூர்,விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி,  நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி,  ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை ஆகிய 18 தொகுதிகள் இடைத்தேர்தலுக்காக காத்திருக்கிறது. இதோடு திருவாரூர் தொகுதியின் சட்டப்பேரவை  உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கலைஞர், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ  ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவால் இந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் தேதியை அறிவிக்கும். இந்த 20 தொகுதிகளின் தற்போதைய நிலை என்ன, பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து, தமிழகம் 20 (T20) என்கிற தலைப்பில் தொகுதிவாரியாக இங்கு அலசப்படுகிறது.

போண்டியான திருப்போரூர்
சென்னை அருகே உள்ள திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி, தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த தொகுதிகளில் ஒன்று. இங்குதான் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரம் உள்ளது.  திருப்போரூர் கந்தசுவாமி கோயில், திருக்கழுக்குன்றம் போன்ற பிரபல கோயில்களும்,  கோவளம் தர்கா, மாதா கோயில் போன்றவையும் உள்ளன. தமிழகத்தின் முதல் கடலோர படகு துறையான முட்டுக்காடு படகுத்துறை, கோவா கடற்கரைக்கு இணையான கோவளம் கடற்கரை, வட நெம்மேலி முதலை பண்ணை போன்றவையும் அடங்கிய தொகுதி. தமிழகத்தின் இரு முக்கிய சாலைகளான பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையும் இங்குதான் உள்ளன. இத்தொகுதியில் அதிமுக எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோதண்டபாணி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணிக்கு தாவியதால் பதவியை இழந்ததால், தொகுதி காலியாகி இருக்கிறது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவராக இருந்தபோதே., மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர். எம்எல்ஏ.வாக இருந்தபோது மட்டும் என்ன செய்து விடப் போகிறார். ஒன்றும் செய்யவில்லை. அந்த வெறுப்பு தொகுதி மக்களிடம் ஆழமாக ஊன்றியுள்ளது. இத்தொகுதியில் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவும், கோதண்டபாணியும் அளித்த வாக்குறுதிகள் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டன. எனவே, கோஷ்டியில் சிக்காத, தங்களுக்கு நன்மை செய்யக்கூடிய பலமான எம்எல்ஏ.வை தேர்ந்தெடுக்க, இடைத்தேர்தலை எதிர்நோக்கி காத்திருகின்றனர். இங்கு, மவுன புரட்சி நடக்கப் போவது, மக்களின் மனப்பான்மையில் இருந்து தெளிவாக வெளிப்படுகிறது.

மரணம் நிச்சயம்
மாமல்லபுரம், திருப்போரூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவமனை என பெயருக்குதான் பலகை  இருக்கும். ஆனால் மருத்துவர்கள், படுக்கைகள், பரிசோதனை கூடம் என எதுவும் கிடையாது. ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் விபத்தில் சிக்குபவர்களை இங்கு கொண்டு வந்தால், ‘மரணம்’ நிச்சயம். இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.

எங்கே நிம்மதி?
இந்த தொகுதியில் தீர்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒரு சில இதோ:

கோவளம் கேவலம்    
கடலோர மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கொட்டிவாக்கத்தில் தொடங்கி கடப்பாக்கம் வரை 100 கிமீ கடற்கரை பகுதி இங்கு உள்ளது. இதில் 50 கிமீ தூரம் திருப்போரூர் தொகுதியில் உள்ளது. கோவளம், மாமல்லபுரம் கடற்கரைகள் குப்பைகளின் கூடாரமாக உள்ளன. இதை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.

தூண்டில் வளைவு
ஆழிப்பேரலையால் அதிகம் பாதித்த கடற்கரை கிராமங்களான கோவளம்,  மாமல்லபுரத்தில்  தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

குளிர்பதன கிடங்கு
 முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, புது கல்பாக்கம், நெம்மேலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. ஆனால், மீன்களை பதப்படுத்த  குளிர்பதன கிடங்கு இல்லை. இதை அமைத்துக் கொடுத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். அதேபோன்று கேளம்பாக்கம், கோவளம், கானத்தூர் பகுதிகளில் மீன் விற்பனைக் கூடங்கள் இல்லை.

பாதுகாப்பு மையம்
 ஆழிப்பேரலை, புயல், வெள்ளம் வந்தால் மக்களைப் பாதுகாக்க கிழக்கு கடற்கரை சாலையில் அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையங்கள் அமைக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால் பெரும்பாலான இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பது இல்லை. இதனால், இங்குள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைக்கப்படும் பஸ்
சென்னையின் புறநகர் பகுதிகளாக கேளம்பாக்கம், திருப்போரூர், கோவளம் மற்றும் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்துக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.

மிரட்டும் தோல் நோய்
ஆலத்தூர் மருந்து தயாரிக்கும் தொழிற்பேட்டையில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிகின்றனர். இங்குள்ள மருந்து தொழிற்சாலைகளில் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேறுவதால் ஆலத்தூர், வெங்களேரி, பட்டிபுலம் கிராம மக்களுக்கு தொடர்ந்து தோல் நோய் பிரச்னை ஏற்படுகிறது.

வேண்டும்... வேண்டும் தொகுதியில் தேவைப்படும் வசதிகள்:
* திருப்போரூரில் தீயணைப்பு நிலையம்
* மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம்
* மாமல்லபுரத்தில் பக்கிங்காம் கால்வாய் மீது பாலம்
* திருப்போரூர், மாமல்லபுரத்தில் 24 மணி நேர அரசு மருத்துவமனை
* திருப்போரூரில் நீதிமன்றம்

மகாபாவம் மாமல்லபுரம்
தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் மாமல்லபுரம். இங்கு, மாநில அரசோ, மத்திய அரசோ சிறப்பு நிதி ஒதுக்கி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. முக்கிய புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் ஓய்வெடுக்க இருக்கைகள், கழிப்பறைகள், பூங்காக்கள் என ஒன்று கூட அமைக்கவில்லை. இது, பாவப்பட்ட இடமாகவே உள்ளது.

கொலைகார பேட்ட
சிறுசேரி மென்பொருள் பூங்காவில் டிசிஎஸ்., காக்னிசன்ட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஒன்றரை லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இங்குதான் மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரியில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அன்று முதல் இன்று வரை இந்த தொழிற்பூங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

மாயமான பஸ் பணிமனை
திருவான்மியூரை தாண்டி மாமல்லபுரம் வரை ஓஎம்ஆர், இசிஆர். சாலைகளில் மாநகரப் பேருந்து பணிமனை இல்லை. இதனால் இரவு நேரப் பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்காக தையூரில் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதில் ஒரு அடி கூட முன்னேற்றம் இல்லை. இதைக்காட்டியே அப்பகுதியைச் சுற்றி ரியல் எஸ்டேட் வளர்ந்ததுதான் மிச்சம்.

பக்கிங்காமில் கழிவுநீர்
ஓஎம்ஆர் சாலையில் 6 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. கந்தன்சாவடி தாண்டி கேளம்பாக்கம் வரை எந்த ஊரிலும் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால், கழிவுநீர் பக்கிங்காம் கால்வாயில் விடப்பட்டு சுற்றுச்சூழலை கெடுக்கிறது. - மவுன புரட்சி காத்திருக்கிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T20 midterm election ,assembly constituency ,Tirupooroor , T20 midterm election, Tirupooroor assembly ,
× RELATED ஆந்திர மாநிலம் தாலுவாய் பள்ளி...