×

சேலம் ரயில்வே போலீசார் மடக்கினர் போலி டிக்கெட் பரிசோதகர் பயணிகளை தாக்கிய கொடூரம்

சேலம்:  கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து பொக்காரோ செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம், முன்பதிவில்லா பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவர் நடந்துகொண்ட முறை சந்தேகம் ஏற்படுத்தவே ரயில் பயணிகள், சேலத்தை அடுத்துள்ள சாமல்பட்டி ரயில்வே ஸ்ேடஷன் மாஸ்டரிடம் புகார் தெரிவித்தனர். அவர், அடுத்த ரயில்வே ஸ்டேஷனான திருப்பத்தூர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்து, ஆர்பிஎப் போலீசார் மூலம் அந்த டிக்கெட் பரிசோதகரை ரயிலில் இருந்து இறக்கி விசாரித்தனர்.
அதில் அவர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடைவீதியை சேர்ந்த அல்ஜியானி (31) என்பதும், போலியாக தயாரித்த டிக்கெட் பரிசோதகர் அடையாள அட்டையை அணிந்து கொண்டு ரயில்களில் சோதனையிட்டு, டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் அபராதம் வசூலித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவரிடம் இருந்து 6000 பணம், போலி ரசீது, அடையாள அட்டை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது, அந்த போலி டிக்கெட் பரிசோதகர் அல்ஜியானி, தன்பாத் எக்ஸ்பிரசில் டிக்கெட் எடுக்காத பயணிகளை சரமாரியாக தாக்கிய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகியுள்ளது. 53 நொடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோவில், முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பார்த்து டிக் செய்து கொடுக்கிறார்.

தூங்கும் பயணியை எழுப்பியும் டிக்கெட் கேட்கிறார். அடுத்து 1.53 நிமிடம் ஓடக்கூடிய மற்றொரு வீடியோவில், டிக்கெட் எடுக்காத ஒருவரை கழிவறை பகுதிக்கு அழைத்து வந்து வாசல் அருகே சரமாரியாக தாக்குகிறார். கன்னத்தில் மாறி மாறி அடிக்கும் அவர், டிக்கெட் எடுக்காமல், எதிர்த்து கேள்வியா கேட்கிறாய் எனக்கூறி கொடூரமாக தாக்குகிறார். கீழே தவறி விழும் அந்த பயணியை காலாலும் எட்டி உதைக்கிறார். அப்போது மேலும் இரு பயணிகளை சரமாரியாக கன்னத்தில் அடிக்கிறார். இவை அனைத்தையும் ரயிலில் பயணிக்கும் ஒரு பயணி, செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.  இந்த வீடியோ பதிவு, போலீசிடம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளான பயணிகளில் யாரும் தனியாக புகார் கொடுக்கவில்லை. அதனால், ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem Railway ,ticket examiner , Salem Railway Police, Fake Ticket
× RELATED ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி