×

நெல்லை தூத்துக்குடி இடையே டெமு ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை:  நெல்லை - தூத்துக்குடி இடையே டெமு ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். டெமு ரயில்கள் இயக்கத்தால் பயண நேரமும், செலவும் குறைய வாய்ப்புகள் உள்ளன. நெல்லை-தூத்துக்குடி இடையே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பஸ்சில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். என்ட் டூ என்ட் தொடங்கி சாதாரண பஸ்கள் வரை நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் வசதிகள் முறையாக இல்லாததே இதற்கு காரணமாகும். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கும் செல்லும் ரயில்களில் அதிகளவில் பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால் நெல்லை  தூத்துக்குடி ரயிலில் பயணிகள் விரும்பி பயணிப்பதில்லை. காரணம் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்ல ரயிலில் இரண்டரை மணி நேரம் ஆகிறது. ஆனால் பஸ்களில் ஒன்றே கால் மணி நேரத்தில் தூத்துக்குடியை சென்றடைய முடிகிறது. கூடுதல் பயண நேரம் காரணமாக ரயில்களை யாரும் சீண்டுவதே இல்லை.எனவே நெல்லை  தூத்துக்குடி இடையே டெமு ரயில்களை இயக்கினால் பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வரும் டெமு (DEMU டீசல்எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்களை நெல்லை தூத்துக்குடி மார்க்கத்தில் இயக்கினால் பயண நேரம் குறைவதோடு, பராமரிப்பு செலவும் 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. டெமு ரயில்கள் முன்னும், பின்னும் இன்ஜினை கொண்டிருப்பதால் இருபுறமும் இயங்கும். எனவே வாஞ்சி மணியாச்சியில் இன்ஜினை கழற்றி மாற்ற வேண்டியதில்லை. இதுகுறித்து அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் மாநில செயலாளர் குலோத்துங்க மணியன், இணை செயலாளர் சத்யபாலன் ஆகியோர் கூறுகையில், ‘‘ நெல்லை தூத்துக்குடி இடையே டெமு ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் பாதியாக குறையும். சுமார் ஒன்றே கால் மணி நேரத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல முடியும்.

அதிலும் வாஞ்சி மணியாச்சி செல்லாமல் பைபாஸ் பாதையில் சென்றால் 50 நிமிடத்தில் தூத்துக்குடி செல்ல முடியும். இதனால் பயணிகள் கூட்டம் ரயிலை நோக்கி படையெடுத்து வரும். தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு செல்ல தற்போது அதிகபட்ச பஸ் கட்டணம் ரூ.52 ஆகும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.35. ஆக மொத்தம் தூத்துக்குடி நெல்லை இடையே சென்று வருவதற்கு ஒரு பயணிக்கு குறைந்தபட்சம் ரூ.70 முதல் ரூ.102 வரை ஆகிறது. நெல்லை தூத்துக்குடி இடையே டெமு ரயில்கள் இயக்கப்பட்டால் ரூ.50 கட்டணத்திற்குள் ஒரு மணி நேரத்திற்குள் சென்று வரலாம். மேலும் தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு முன்பு மீட்டர்கேஜில் இயக்கப்பட்டது போல் ரயில்களை இயக்கவும் வழிபிறக்கும்.

தூத்துக்குடி பயணிகள் திருவனந்தபுரம், திருச்சி, ஈரோடு மார்க்க ரயில்களை எளிதில் பிடிக்கவும் செய்யலாம்.’’ என்றனர். தூத்துக்குடியில் இருந்து தினமும் வேலைக்கு கங்கைகொண்டான் தொழிற்பேட்டை, நெல்லை, பாளை ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள், அரசு, தனியார் ஊழியர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களது தேவையை கருத்தில் கொண்டு நெல்லை தூத்துக்குடி இடையே டெமு ரயில்கள் இயக்கப்பட்டால் பயண நேரமும், செலவும் குறைய வாய்ப்புள்ளது.

டெமு ரயில்கள் ஒரு கண்ணோட்டம்

ரயில் இன்ஜின்களில் டீசலை முழுமையாக பயன்படுத்தும் வகையிலே டெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய ரயில்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன் 60 முதல் 80 கி.மீ வரை வேகத்தில் செல்லக் கூடியதாகும். டெமு ரயில்கள் இயக்கத்தால் கார்பன் மாசு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் விருதுநகர் காரைக்குடி மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண பாசஞ்சர் ரயில்களை விட டெமு ரயில்களில் அதிக பயணிகள் ஏறிச் செல்ல வசதிகள் உண்டு.

அதிகாரிகள் ஆய்வும், இடத்தேர்வும்

நெல்லையில் இருந்து டெமு ரயில்களை இயக்கிட 6 மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே ஆபரேட்டிங் மேலாளர் முகம்மது நிஷார் தலைமையில் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினர். ரயில் தண்டவாளங்கள் மற்றும் குட்ஷெட், பிட்லைன் ஆகிய இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு டெமு ரயில்கள் வந்து செல்ல போதிய வசதிகள் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். நெல்லையில் டெமு ரயில்கள் நிறுத்தி வைக்க ஷெட் அமைக்க 150 மீட்டரில் இடம் தேவை. அதற்காக பேட்டை, மேலப்பாளையம், கங்கை கொண்டான், பாளை உள்ளிட்ட பல இடங்கள் பார்வையிடப்பட்டும் திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : run ,DMU ,Nellu Thoothukudi , Tirunelveli, Tuticorin, temu train
× RELATED போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம்; டெல்லி 208 ரன் குவிப்பு