×

மருத்துவ சீட் மோசடி விவகாரம் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து இன்ஸ்பெக்டர், காவலர் மீது வழக்கு: நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி

சென்னை: கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கேளம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தீபாநாத் என்பவர், கேளம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ். நகரில் தங்கி, வட மாநிலங்களில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார். இவரது உறவினர் பெண் ஒருவருக்கு மருத்துவ படிப்புக்கான சீட் தேவைப்பட்டது. அப்போது, தன்னுடன் கல்லூரியில் படித்த அசத்துல்லா மற்றும் ரிஷப்கில் ஆகியோர், ₹15 லட்சம் கொடுத்தால் மருத்துவ சீட் வாங்கித்தருவதாக கூறினர். இதை நம்பி, அவர்களிடம் முதற்கட்டமாக ₹50 ஆயிரமும், ₹14 லட்சத்திற்கு 2 காசோலைகளும் கொடுத்துள்ளார். அதன்படி, அந்த பெண்ணுக்கு இவர்கள் இருவரும் நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்துள்ளனர். கல்லூரியில் விசாரித்தபோது, மெரிட் அடிப்படையிலேயே மருத்துவ சீட் வழங்கப்பட்டதும், பணம் ஏதும் பெறப்படவில்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து அசத்துல்லா மற்றும் ரிஷப் கில் ஆகியோர் பெயரில் கொடுத்த 2 காசோலைகளையும், பணம் மாற்ற முடியாதபடி தீபாநாத் நிறுத்தி விட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அசத்துல்லா மற்றும் ரிஷப் கில் ஆகியோர், பணத்தை கொடுக்குமாறு தீபாநாத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மேலும், அவரிடமிருந்து கார் ஒன்றையும் எடுத்து சென்றனர். மேலும், தங்களிடம் ₹14 லட்சத்தை தீபாநாத் கடன் வாங்கிவிட்டு, தராமல் ஏமாற்றுவதாக கேளம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை விசாரித்த போலீசாருக்கு, இது மருத்துவ சீட் வாங்கித் தருவதில் ஏற்பட்ட தகராறு என தெரியவந்தது. அப்போது, அசத்துல்லாவும், ரிஷப் கில்லும் சொன்னபடி மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்து விட்டதால் பேசியபடி பணத்தை கொடுத்து விடுமாறு கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் தீபாநாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிரட்டியதாகதெரிகிறது. மேலும் பஞ்சாயத்து பேசி ₹6.90 லட்சம் பாக்கியை தர வேண்டும் என்று எழுதி கையெழுத்து பெற்று அதை அசத்துல்லாவிடம் கொடுத்ததாகவும், இதற்காக இன்ஸ்பெக்டருக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தீபாநாத் வழக்கறிஞர் மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் இப்புகார் மீது விசாரணை நடத்துமாறு மாமல்லபுரம் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டது.

இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தீபாநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் போலீசார் மீதும், தன்னை மிரட்டுபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து தீபாநாத்தை மிரட்டிய அசத்துல்லா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொரக்கஞ்சி கங்காதர், காஷ்மீரைச் சேர்ந்த ரிஷப் கில் ஆகியோர் மீதும், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, காவலர் ராஜ்குமார் ஆகியோர் மீதும் தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்தார். காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர், காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகார் கொடுத்தவர் மீதே புகார்
கேளம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் நேற்று 1 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தீபாநாத் தங்களிடம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி பல லட்சங்களை ஏமாற்றி விட்டதாகவும், அந்த பணத்தை பெற்றுத் தருமாறும் அவர்கள் கூறினர். இதையடுத்து அங்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் முறையாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் செய்தவர்களில் 3 பேர் மட்டும் தீபாநாத் மீது புகார் கொடுத்தனர். கேளம்பாக்கம் போலீசார் இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.

தீபாநாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிரட்டிய போலீசார், பஞ்சாயத்து பேசி ₹6.90 லட்சத்தை பெற்று அதை அசத்துல்லாவிடம் கொடுத்ததாகவும், இதற்காக இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு ஒரு தொகையை சம்மந்தப்பட்டவர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது






பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspector of Police , Medical seat fraud case The Inspector of the Police Station, the Case Against the Police: Action at Court Order
× RELATED அண்ணா சாலை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில்...