சென்னை: தமிழ்நாட்டில் பிரபல அரிசி பிராண்ட் பெயரில் போலியாக தயாரித்த அரிசி மூட்டைகளை மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வந்தவரை அமலாக்கத்துறை புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, காலாரிப்பட்டு கிராமத்தில் காலனி ரோட்டில் பிரகாஷ் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு உரிமையாளர்கள் வீ.கே.ஆர்.வெங்கடேஷ், கணேஷ், பிரகாஷ் ஆகிய 3 பேரும் உரிமையாளராக உள்ளனர்.
இந்த ஆலையில் இருந்து சிவாஜி அக்மார்க் விஐபி ரைஸ் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான அரிசிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கீழ்க்கட்டளையில் உள்ள குமரன் ஸ்டோர்ஸ் என்ற அரிசி மொத்த விற்பனை மையத்தில் மேற்கண்ட அதே அரிசி பிராண்ட் போலவே ‘சிவாஜி ஹைடெக் புட்’ என்ற பெயரில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ஆரணியில் உள்ள ‘சிவாஜி பிராண்ட் அரிசி’ என்று நினைத்து ‘சிவாஜி ஹைடெக் அரிசியை’ வாங்கி செல்கின்றனர். இதில், திருவல்லிக்கேணியில் உள்ள ஒருகடையில் வாங்கப்பட்ட ‘சிவாஜி ஹைடெக் அரிசி’ தரமற்றது என்று வாடிக்கையாளர்கள் ஆரணியில் உள்ள நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஆரணி சிவாஜி பிராண்ட் அரிசி நிறுவனத்தின் மேலாளர் யுவாராஜ், நேற்று முன்தினம் அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், அமலாக்கத்துறை புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து போலியான பெயரில் அரிசி விற்பனை செய்து வந்த கீழ்க்கட்டளையை சேர்ந்த கருணாகரன் (45) என்பவரை நேற்று கைது செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நேற்று மருத்துவமனைக்கு சென்று கருணாகரனை ஒருவாரம் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் குமரேசன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், கீழ்க்கட்டளையில் செயல்படுவந்த போலி அரிசி ஆலைக்கு சீல் வைத்து 10 ஆயிரம் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி