×

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர்... ஆஸி. ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடர், மெல்போர்னில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடர், மெல்போர்ன் பார்க்கில் இன்று தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் இது என்பதால், இதில் சாம்பியன் பட்டம் வெல்ல முன்னணி வீரர், வீராங்கனைகள் வரிந்துகட்டுகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 3வது நிலை வீரராகக் களமிறங்குகிறார். ஜோகோவிச், நடால் இருவருக்கும் முறையே முதல் மற்றும் 2வது நிலை வழங்கப்பட்டுள்ளது. டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளாக நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர்கள், காயங்களில் இருந்து மீண்டு வந்துள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த அனுபவ வீரர்களுக்கு சவாலாக ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஆகியோரும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரே, இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜோகோவிச் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் மிட்செல் குரூகருடன் மோதுகிறார். ரபேல் நடால் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தையும், ரோஜர் பெடரர் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினையும் எதிர்கொள்கின்றனர்.

ஆஸி. ஓபனில் பெடரர், ஜோகோவிச் இருவரும் தலா 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ரபேல் நடால் இங்கு ஒரு முறை மட்டுமே கோப்பையை முத்தமிட்டுள்ளார்.
சென்னை வீரர்: ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (29 வயது) தகுதி பெற்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குணேஸ்வரன் (உயரம்: 6 அடி, 2 அங்குலம்; எடை: 80 கிலோ) தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 3ம் நிலை வீராங்கனையாக களமிறங்குகிறார். ரோமானியாவின் சிமோனா ஹாலெப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் இருவருக்கும் முறையே முதலாவது, 2வது நிலை அந்தஸ்து (சீடிங்) வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 16வது நிலை வீராங்கனையாகக் களமிறங்க உள்ளார்.

குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் செரீனா, 2019 சீசனை கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் தொடங்கும் உறுதியுடன் உள்ளார். ஆஸி. ஓபனில் அவர் 7 முறை கோப்பையை வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி உள்ளார். இம்முறை பட்டம் வெல்ல செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோரும் வரிந்துகட்டுவதால் மகளிர் ஒற்றையர் பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் ஷரண் ஜோடி சாதிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. மற்றொரு இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் நிகோலஸ் மன்றோவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

முழுவீச்சில் தயார்... பெடரர் உற்சாகம்
ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியனான சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் (37 வயது), தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைப்பதுடன் 7வது முறையாக பட்டம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2017, 2018ல் அவர் இங்கு தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று மகத்தான சாதனையாளராக விளங்கும் பெடரர் இது குறித்து நேற்று கூறியதாவது: புதிய சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முழுவீச்சில் தயாராகி இருக்கிறேன்.

கடினமான பயிற்சியால் எதிர்பார்த்ததை விடவும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். காயம் காரணமாக ஆண்டி மர்ரே ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளித்தது. அவர் மிகச் சிறந்த வீரர். முழு உடல்தகுதி இல்லாத நிலையில் தொடர்ந்து விளையாடுவது சரியல்ல என நினைப்பதில் தவறு எதுவும் இல்லை. மர்ரேவின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆஸி. ஓபனில் சிறப்பாக விளையாடுவதுடன், விம்பிள்டன் வரை தாக்குப்பிடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறும் என நம்புகிறேன். இதுவரை சாதித்த வெற்றிகளை அவர் பெருமையோடு நினைவில் கொள்ளலாம். இவ்வாறு பெடரர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Grand Slam ,Aussie ,Open Tennis Today Kolakalla Launch , Grand Slam series,year,Australia Open Tennis,Today,Launch,Participation
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா மீண்டும் சாம்பியன் ஹாட்ரிக் சாதனை