×

பரிசு கொடுப்பதை நிறுத்தி வளர்ச்சி பணிகளை செய்யலாம்: வின்ஸ் ஆன்றோ, கன்னியாகுமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன்

தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ₹1000 ரொக்க தொகையை அறிவித்து வழங்கி வருகிறது. மிகுந்த ஏழைகளுக்கும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இதனை  அறிவித்து அவர்களுக்கு மட்டும் வழங்கியிருந்தால் அவர்கள் அதனை பெற தகுதிவாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எந்த தவறும் இல்லை.  ஆனால், அந்த ஆயிரம் ரூபாயை கேவலமாக பார்க்கின்ற வசதி படைத்தவர்களும் தற்போது பொங்கல் பரிசு பெறும் பட்டியலில் உள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தை கையில் ைவத்துள்ள அரசு, தனது  நிர்வாகத்தை பயன்படுத்தி விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் ஓட்டுக்காகவே அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1000 என்று வழங்கி வருகின்றனர் என்று கருத வேண்டியுள்ளது.  ஓகியில் குமரி மாவட்டமும், கஜா புயலில் டெல்டா மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு தனது நிர்வாகத்தை பயன்படுத்தி ஓகியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேவையானவற்றை வழங்கியிருக்கலாம். குமரி  மாவட்டத்தில் ஓகி புயலால் நீர்நிலைகள் கால்வாய்கள், குளங்கள் உடைப்பு  ஏற்பட்டது. அவற்றுக்கு இந்த நிதியை பயன்படுத்தி சீரமைப்பு பணிகளை செய்து இருக்கலாம். இன்னும் பாதிப்பில் இருந்து குமரி மக்கள் மீண்டு  விட்டதாக கூற முடியாது.
 பொதுவாக அரசே பரிசு கொடுப்பதை நிறுத்திவிட்டு வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும். நீண்டகால பயனை கொடுக்கின்ற நீர்நிலைகளை சீர் செய்யும் பணிகளை இந்த நிதியை கொண்டு செய்திருக்கலாம். ஓகி இழப்புகள்,  தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமல்ல, அரசு சொத்துக்களுக்கும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்கின்ற பணிகளை அரசு தொடங்கவே இல்லை.

ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், மலைவாழ் மக்கள் என்று மூன்று தரப்பாக பாதிக்கப்பட்டவர்களை வகைப்படுத்தலாம்.  25க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓகி புயலில்  பலியாகினர். ஆனால் 14  பேருக்கு மட்டுமே அரசு சார்பில் தலா ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவை போன்று  தமிழக அரசு நடந்து ெகாள்ள  முயற்சிக்க கூட இல்லை. பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ₹25 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க கேட்டும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனை போன்று தென்னை மரம் ஒன்றுக்கு ₹3 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரையும், ரப்பர் மரம் ஒன்றுக்கு ₹7 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரையும் நிவாரணமாக கேட்டு வந்தோம்.
 ரப்பர் மரம் ஒன்றுக்கு ₹40 முதல் ₹50 வரையும், வாழை ஒன்றுக்கு ₹15 முதல் 20 வரையும், தென்னைக்கு ₹100 முதல் ₹125 வரை நிவாரணம் வரும் வகையில் அரசு அறிவித்தது. ஆனால் வாழை ஒன்றுக்கு ₹2 முதல்  ₹5 வரையும், ரப்பருக்கு ₹20 முதல் ₹30 வரையும் தென்னைக்கு ₹100க்கு குறைவாகவும்  அரசு நிவாரணமாக வழங்கியிருந்தது.   இப்படி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை வஞ்சித்து விட்டு, இப்படி மலிவான விளம்பரத்துக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் அரசு கவனம் செலுத்துவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.  இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகவே உள்ளது. தனது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் எந்த நிவாரண உதவிகளையும் செய்யவில்லை. இதனால் கடன் வாங்கியும், குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் பலரும் இப்போது கடனை அடைக்க முடியாமல்  மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vince Oro ,Kanyakumari District Department of Irrigation , Giving gift,development,job,Vince Ono, Kanyakumari
× RELATED போக்குவரத்து...