×

திருவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கலுக்கு தயாராகிறது மலையாள வெல்லம்

திருவில்லிபுத்தூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள் தங்களது நிலங்களில் அதிகளவில் கரும்பு பயிரிட்டிருந்தனர். தற்போது நன்கு விளைச்சல் கண்டுள்ள கரும்புகளை அறுவடை செய்து வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலத்து வெல்லத்திற்கு தனி மவுசு உண்டு. இதற்கு அடுத்தபடியாக திருவில்லிபுத்தூர் பகுதி வெல்லத்திற்கு தனி சிறப்பு உண்டு. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் தயாராகும் உருட்டு வெல்லத்திற்கு கேரளாவிலும் அதிக டிமாண்ட் உள்ளது. இந்த உருட்டு வெல்லம் ‘மலையாள வெல்லம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
             
பொதுவாக திருவில்லிபுத்தூர் பகுதியில் மண்டை வெல்லம் மற்றும் உருட்டு வெல்லம் சம அளவில் தயாரிக்கப்படும். ஆனால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உருட்டு வெல்லம் அதிகளவில் தயாராகிறது. இது குறித்து விவசாயி கருப்பையா (55) கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்களுடன், வெல்லமும் வழங்குகிறது. இதனால் வெல்லத்தின் தேவை கூடியுள்ளது. மண்டை வெல்லத்தை காட்டிலும் மலையாள வெல்லம் தயாரிப்பது எளிதானதாகும். மேலும் மலையாள வெல்லத்தை மூடைகளாக கட்டி விற்பனைக்கு அனுப்புவதற்கு எளிதாக இருக்கும். எனவே இந்தாண்டு அதிகளவில் மலையாள வெல்லத்தை  தயாரிக்கிறோம். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் இரவு, பகலாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malayali cheerleaders ,Pongal ,Srivilliputhur , Malayali cheerleaders , preparing for Pongal ,Srivilliputhur
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்..!!