வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெ., விரும்பவில்லை : லண்டன் டாக்டர் வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளிநாட்டிற்கு மேல்சிகிச்சைக்காக செல்ல விரும்பவில்லை என்று ஜெயலலிதா கூறியதாக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே வீடியோ பேசும் வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் ஆஜரான டாக்டர்கள் சிலர் ஜெயலலதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும். ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த இதயவியல் சிகிச்சை நிபுணர்கள் சபீன் ஷர்மா, ரசூல், மும்பையை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரும் வலியுறுத்தி இருந்தார் என்று வாக்குமூலம் அளித்திருந்தனர். ஆனால், அப்போலோ தரப்பில் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. எனவே, அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை தேவையில்லை என்று தெரிவித்ததாகவும் டாக்டர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2016 டிசம்பர் 3ல் தேதி ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதால், இப்போதைக்கு ஆஞ்சியோ தேவையில்லை என்று கூறியதாக டாக்டர் வாக்குமூலம் அளித்திருந்தனர். ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரும் அதையே தான் கூறி இருந்தார். இந்த நிலையில்  தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது குறித்து குறிப்பு எழுதியதாக கூறியிருந்தார். ஆனால், ஓரிரு நாளில் அமைச்சர்கள் இந்த கருத்து குறித்து பேசியதாகவும், அதன்பிறகு அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக  எதுவும் பேசாமல் மவுனம் காத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்தியாவிலேயே தரமான டாக்டர்கள் இருக்கின்றனர். இங்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்தநிலையில் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருந்தது. இந்த சூழ்நிலையில் அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு கடைசி வரை ஆஞ்சியா சிகிச்சை அளிக்காததும் அவரது மரணம் சம்பவிப்பதற்கு ஒரு காரணம் என்று அப்போலோ தனது மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரிச்சர்ட் பீலே பேசிய போது ரகசியமாக பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2.02 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஜெயலலிதாவிற்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஒருவரிடம் ரிச்சர்ட் பீலே கூறுகிறார். அப்போது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும் பீலே விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு மேல் சிகிச்சைக்காக செல்ல விரும்பவில்லை என்றும் சிகிச்சை வேண்டாம் என்று கூறியதாகவும், ெஜயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் இருந்ததால் கடந்த 2016 நவம்பர் 2ம் தேதிக்கு பிறகு என்னை அழைக்கவில்லை. அப்போலோவல் ஜெயலலிதாவிற்கு முடிந்த அளவு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மூத்த அமைச்சரிடம் தினமும் விளக்கப்பட்டது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
தற்போது ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாமல் தடுத்தது யார் என்று சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் வேண்டும் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது லண்டன் டாக்டர் பேசுவது போன்ற வீடியோ வெளியானதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டள்ளது. இந்த நிலையில் ரிச்சர்ட் பீலே பேசுவது போன்ற வீடியோவை டிடிவி தரப்பு தான் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும்