×

தண்டராம்பட்டு அருகே பரிதாபம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கருகிப்போன நெற்பயிர்கள்: மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட அவலம்

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் நெற்பயிர்கள் கருகி உள்ளன. இதனால் வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற 40 நாள் தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் நிலத்தடி நீர் பயன்படுத்தி விவசாய பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இந்தாண்டு பருவமழை பொய்த்ததால் கிணற்றில் நீர் இருப்பு  குறைந்து வருகிறது. குறைந்த அளவிலான தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். எனினும் பல இடங்களில் போதியநீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. அவற்றை காப்பாற்ற முடியாமல் கண்ணீரில் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். இதற்கிடையே சில விவசாயிகள் கருகிவரும் ெநற்பயிர்களில் தங்களது  கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையில் இருந்து ஜனவரி மாதத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதுகுறித்து, கடந்த 3ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை  மற்றும் வருவாய் அதிகாரிகள் தலைமையில் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விவசாயிகள் 40 நாள் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், தற்போது உள்ள சூழலில் தமிழக அரசு உடனடியாக சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால்தான் மணிலா,  நெல், கரும்பு போன்ற பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thantharampattu , Pandharapattu ,Thantharampattu,groundwater, pasture
× RELATED கலசபாக்கம், தண்டராம்பட்டு அருகே...