×

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு கோதையாற்றின் கரை பகுதியில் தடுப்பு வேலிகள்

குலசேகரம் : குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. கடந்த சில மாதங்களாக கோடை வெயிலினால் அருவியில் தண்ணீர் விழுவது குறைந்து வறண்டு காணப்பட்டது. தற்போது பெய்து வரும் கோடை மழையால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வருகை அதிகரித்து வருகிறது. திற்பரப்பு அருவியும் மழையால் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பயணிகள் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன் அணையிலிருந்து 500 கன அடி நீர் உபரி நீராக கோதையாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாறு கரை புரண்டு ஓடியது. திற்பரப்பு அருவியில் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்ற அறிவிப்பு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பொழிவு அதிகம் இருக்கும் என்ற வானிலை அறிவிப்புகளால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் திற்பரப்பு அருவியை ஆய்வு செய்த போலீசார் பாதுகாப்பு கருதி அருவியின் நுழைவு வாயிலை மூடினர். இதனால் அருவிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருவியை காண முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தும் அருவி வழியாக பாய்ந்து செல்லும் கோதையாற்றின் அழகை பயணிகள் பார்த்து மகிழ்வதோடு, சிலர் குளியல் போட்டும் சென்றனர். மழை குறைந்து பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் நேற்று முதல் உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை நீடிப்பதால் தொடர்ந்து 3 வது நாளாக பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

குமரி மாவட்ட சுற்றுலா ஸ்தலங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால் சுற்றுலா ஸ்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. திற்பரப்பு அருவிக்கு அருகிலும் கோதையாற்றில் யாரும் இறங்காத வண்ணம் நேற்று தற்காலிக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி திற்பரப்பு பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் விஜயகுமார், குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் கண்கானித்தனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

The post திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு கோதையாற்றின் கரை பகுதியில் தடுப்பு வேலிகள் appeared first on Dinakaran.

Tags : Tilparapu ,Kotai River ,Kulasekaram ,Thilparapu ,Kumari district ,Kodaiyar ,Dinakaran ,
× RELATED 8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி