×

போக்குவரத்து விதி மீறுபவர்கள் சிசிடிவி மூலம் சிக்குவார்கள்: ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னை மாநகரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், சென்னையில் மெரீனா கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை  மற்றும் முக்கிய சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தினோம். அந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் முதல்முறையாக சிசிடிவி கேமரா பதிவு மூலம் போக்குவரத்து விதிமீறல்களில்  ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதாவது, சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 333 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறி  வாகனம் ஓட்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் லைெசன்ஸ் உரிமம் ரத்து செய்யப்பபட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறுபவர்களை  சிசிடிவி கேமரா மூலம் கண்டறியும் பணி தொடர்கிறது. போலீஸ் நடவடிக்கைக்கு   ஆளானவர்களுக்கு பாஸ்போர்ட் அனுமதி மறுப்பு, வேலைவாய்ப்பில் காவல்துறை  நன்னடத்தை சான்று மறுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட  வாய்ப்புள்ளது.போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு பாடமாக   இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கடும் நடவடிக்கைகள்  எடுக்கப்படுகின்றன.

அதன்பிறகாவது, எதிர்காலத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீற மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. அதிவேகமாக  வாகனம் ஓட்டுவது, விதிகளை மீறி வாகனங்களில் செல்வதால் ஆபத்து என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தான் வருகிறது. சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது அவர்கள் தான்.  குறிப்பாக, இளைஞர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது, போக்குவரத்து விதிகளை மீறி செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால்தான் பல நேரங்களில்  விபத்து நடக்கிறது. நாங்கள் எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும் பொதுமக்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற  பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால், விபத்தில்லா புத்தாண்டை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முடியும். மேலும், இந்த புத்தாண்டை பாடமாக வைத்து கொண்டு அடுத்த புத்தாண்டில் விபத்துக்களை தடுக்கவும் தீவிர  நடவடிக்கை எடுக்கப்படும்.

 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கையால் ஈவ்டீசிங், திருட்டு போன்ற எந்த புகாரும் இல்லை. இந்த பிரச்சனைகள் போலீசாரின் நடவடிக்கையால் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. அதே  நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தில் செல்வது போன்ற புகார்கள் தான் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விதிகளை பின்பற்றக்கோரி  தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு  செய்துள்ளோம்.  புத்தாண்டு காலகட்டங்கள் மட்டுமில்லாது, எந்த காலக்கட்டத்திலும் விபத்துக்கள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் சென்னை மாநகர காவல்துறை மேற்கொள்ளும்.போலீஸ் நடவடிக்கைக்கு ஆளானவர்களுக்கு பாஸ்போர்ட் அனுமதி மறுப்பு, வேலைவாய்ப்பில் காவல்துறை நன்னடத்தை சான்று மறுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட  வாய்ப்புள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trafficking violators ,Chennai City Police Commissioner , Traffic, CCTV ,AKViswanathan, Chennai Metropolitan ,Police ,Commissioner
× RELATED அதிமுக ஆட்சியில் சீமானை...