×

அழியும் மண்பாண்ட உற்பத்தி பொங்கல் பரிசுடன் வழங்க எதிர்பார்ப்பு

மொடக்குறிச்சி: மண்பாண்ட உற்பத்தி அழிந்து வருவதால் இதை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பரிசுடன் இலவசமாக வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்படுகிறது. அத்துடன், ரேஷன்கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இவற்றுடன் கூடுதலாக ரூ.1000 பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் வைப்பதற்கு பயன்படும் மண் பானை பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இத்தொழில் அழியும் நிலையில் உள்ளது. எனவே, பாரம்பரியமான இத்தொழிலை காக்கும் வகையில், ரேஷன் பொருட்களுடன் சேர்த்து, மண் பானையும் வழங்க வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மண் பானை உற்பத்தியாளர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்பாண்ட  தொழில் மூலம் பானைகள் சைஸ் வாரியாக பொங்கல் பானை, தயிர்பானை, கோயில் கும்ப  கலையம், தானியங்கள் பதப்படுத்தும் பானைகள் உள்ளிட்ட பானைகளும், அதேபோல்  கோயில்களில் சாமிசிலைகள், குதிரைகள், பைரவர், மண்விளக்கு, கார்த்திகை  தீபவிளக்கு, மண் பூவோடு என செய்துவந்தனர். பின்னர், காலத்திற்கு  தகுந்தாற்போல் தற்போது மண்பானை, மண்செக்கு, மண் வாட்டர் பாட்டில், கரகம்,  கலை நயத்துடன்கூடிய அழகு பொருட்கள் என அனைத்து விதமான மக்கள் பயன்படுத்தும்  பொருட்கள் எவர்சில்வர் பாத்திரங்கள் மாதிரியே செய்து விற்பனை செய்து  வருகின்றனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி முகாசி அனுமன்பள்ளியை சேர்ந்த மண்பாண்ட வடிவமைப்பாளர் கனகராஜ் கூறியதாவது: பெருகிவரும் நாகரீகத்தால் மண்பாண்டத்தால் செய்யப்பட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தாமல் மற்ற பொருட்களை பயன்படுத்துவதால் இத்தொழில் நசிந்து வருகிறது. உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத இந்த மண்பாண்ட பொருட்களை பயன்படுத்த, தமிழக அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுபோல் இத்தொழிலுக்கும் இலவச மின்சாரம் மற்றும் பானை செய்ய பயன்படுத்தும் இலவச மின்சக்கரம் வழங்க வேண்டும். மண் பாண்ட பொருட்களை அரசே கொள்முதல் செய்து, பூம்புகார் விற்பனை நிலையம் மற்றும் கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு இப்பொருட்களை ரேஷன் கடை வாயிலாக மக்களுக்கு இலவசமாக வழங்கினால் பாரம்பரியமிக்க இத்தொழில் பாதுகாக்கப்படும். இவ்வாறு கனகராஜ் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pongal,gift,offer,prospect,extinction,pottery
× RELATED ஏற்காடு கோடை விழாவில் படகு போட்டி திடீர் ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்