×

நாகர்கோவிலில் அதிகாரிகள் எச்சரிக்கையை மீறி தெருநாய்களுக்கு இறைச்சி கழிவுகளை வீசும் நபர்: ரத்த வாடையால் பொதுமக்களை பதம் பார்க்கும் பரிதாபம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து தெரு நாய்களுக்கு வீசி வரும் நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாய்கள் ெதால்லை அதிகரித்து வருகிறது. வெறி நாய்கள் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்துள்ளனர். நாய்கடிக்கு உள்ளான சிறுமிகள், குழந்தைகள் கதறும் வீடியோக்கள் நெஞ்சை பதற வைக்கிறது. இது போன்ற சம்பவங்களால் அச்சம் அடைந்த உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்து, நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

நாகர்கோவிலில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்பவர்களை கடித்து, நாய்கள் பதம் பார்த்து வருகின்றன. சில சமயங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும் தெருவில் நடந்து செல்பவர்களை கடித்து காயப்படுத்துகின்றன. விபத்துக்களுக்கும் நாய்கள் காரணமாகின்றன. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நாய்களை பராமரிக்கும் வகையில் தெங்கம்புதூரில் மாநகராட்சி சார்பில் ஏபிசி சென்டர் உள்ளது. (அனிமல் பெர்த் கண்ட்ரோல்) தெரு நாய்களை பிடித்து இங்கு கருத்தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பாதிப்பு, உயிர் பலி சம்பவங்களை தொடர்ந்து தெரு நாய்களை மாநகராட்சி பிடித்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. வளர்ப்பு நாய்களை தெருவில் அழைத்து வரும் போது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிவித்து தான் அழைத்து வர வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே தெரு நாய்களுக்கு சிலர் இறைச்சி கழிவுகளை எடுத்து தினமும் உணவாக வழங்கி வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் தெரு நாய்கள் சூழ்ந்து கொள்கின்றன. பையில் உள்ள இறைச்சி எலும்பு துண்டுகள், கோழி கால்கள் ஆகியவற்றை தெரு நாய்களுக்கு உணவாக வழங்கி விட்டு செல்கிறார்கள். இவர்கள் வர வில்லை என்றால் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் அந்த சமயத்தில் இறைச்சி கழிவுகளை தேட தொடங்கி வெறி பிடித்தது போல் குரைத்தவாறு அலைகிறது. இது போன்ற நாய்களாலும், பொதுமக்கள் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் வெட்டூணிமடம், கிறிஸ்துநகர், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், கைலாஷ் கார்டன், பள்ளிவிளை, மேல கலுங்கடி, அவ்வை சண்முகம் சாலை, கோட்டார், செட்டிக்குளம், ராமன்புதூர், கார்மல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகளையும் சில சமயங்களில் துரத்துவதால், மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. சமீபத்தில் வடசேரி பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்தனர். ஆனால் தெருக்களில் நாய்கள் ெதால்லை தீர வில்லை.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் உலா வரும் நபர் ஒருவர் நீண்ட காலமாக தெரு நாய்களுக்கு இறைச்சி கழிவுகளை பொது வெளியில் வைத்து வீசி வருகிறார். காலையில் அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்பதால் அந்த சமயங்களில் தெருத்தெருவாக சென்று இறைச்சி கழிவுகளை தெரு நாய்களுக்கு வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். பொதுமக்கள் கண்டித்தாலும் இந்த நபர் கேட்பதில்லை.

நான் பல ஆண்டுகளாக இப்படித்தான் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறேன். அந்த ஜீவன்கள் பாவம். அவர்களுக்கு யார் உதவுகிறார்கள் என கேட்கிறார். நாய்களும் அவரை பார்த்ததும் சுற்றி வளைத்துக் கொள்கின்றன. அவர் வீசிய அந்த இறைச்சி கழிவுகளை சண்டை போட்டு கடிக்கின்றன. அந்த ரத்த வாடையை அப்படியே மோப்பம் பிடிக்கும் நாய்கள், பின்னர் தெருக்களில் செல்பவர்களை பதம் பார்க்கின்றன.

முதலில் இது போன்ற நபர்களை மாநகராட்சி கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்களுக்கு உணவளிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க கூடாது என்ற உத்தரவு உள்ளது. அதை மீறி நடந்து வரும் இந்த நபர் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பையில் இறைச்சி கழிவுகளை அதிகமாக வைத்திருந்த அந்த நபர், தெரு, தெருவாக அதை நாய்களுக்கு வீசி விட்டு செல்வார் என அங்கிருந்த பொதுமக்கள் கூறினர்.

Tags : Nagarkov ,Nagarko ,Nagarkovo ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...