×

திருவிடைமருதூர் அருகே 5 லட்சம் கேட்டு இன்ஜினியரிங் மாணவனை கடத்தி கழுத்தை அறுத்து கொடூர கொலை

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கொலை செய்யப்பட்டார். பெற்றோர் போலீசுக்கு தெரிவித்ததால் மர்ம நபர்கள்  இந்த வெறிச்செயலை அரங்கேற்றியுள்ளனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை அருகே ஆவனியாபுரம் வாழைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சாதிக்அலி. இவரது மகன் முன்தசீர் (19). மயிலாடுதுறையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தசீர் தனது நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக  கூறி டூவீலரில் இரவு 7 மணிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தாய் மும்தாஜிக்கு சுமார் 8 மணியளவில் முன்தசீர் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர், `உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். 5 லட்சம் தர வேண்டும். சற்று நேரத்தில் எந்த இடத்திற்கு வரவேண்டுமென்று தெரிவிப்போம். எக்காரணம் கொண்டும் காவல் நிலையத்திற்கு செல்லக்கூடாது’ எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால்  பதறிப்போன மும்தாஜ் உறவினர்களுடன் திருவிடைமருதூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அவரிடம் அழைப்பு வந்த செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்ததில், தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை காட்டியது. பின்னர் உறவினர்களுடன் போலீசாரும் அங்கு சென்று தேடியுள்ளனர்.

இதனை கண்காணித்துக்கொண்டிருந்த மர்ம கும்பல் ஆத்திரமடைந்து திருபுவனம் வேம்படி சுடுகாட்டிற்கு முன்தசீரை அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று, சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.  இதற்கிடையில், இரவாகி விட்டதால் போலீசார் தேடுதல் வேட்டையை நிறுத்திவைத்தனர். நேற்று காலையில் திருபுவனம் வேம்படி பகுதியில் வாலி பர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது முன்தசீர் உடல் என்பது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 5 கி.மீ தொலைவில் காரைக்கால் மெயின் சாலை ஆண்டலம்பேட்டையில் முன்தசீரின் டூவீலர் ரத்தக்கறையுடன் நிறுத்தப்பட்டிருந்ததும், அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி இருக்கக்கூடும் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை பணம் பறிப்பதற்காக நடந்ததா அல்லது வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvidimarudur ,engineering student , 5 lakh inquiry , Thiruvidimarudur, abducting engineering student
× RELATED தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்...