×

மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளதால் தனுஷ்கோடி ரயில் பாதை ஆய்வு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்காக, ரயில் பாதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், புயலில் அழிந்து போன  தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 1914ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருந்து மண்டபம், பாம்பன் வழியாக கடற்கரையோரத்தில் ரயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் துவக்கினர். தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து, கரையூர் கடற்கரை, ஜடாமகுட தீர்த்த கோயில் வழியாக தனுஷ்கோடிக்கும் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் இருந்த மணல் திட்டுகளால் ரயில் பாதையில் மணல் குவிந்து அடிக்கடி போக்குவரத்து தடைபட்டது. இதனால் 1937ம் ஆண்டுடன் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த ரயில் பாதையும் ரயில்வே நிர்வாகத்தினால் கைவிடப்பட்டது. 2003ம் ஆண்டு  மத்தியில் பாஜ ஆட்சியின்போது, ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் தனுஷ்கோடியை ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். மீண்டும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்தை துவக்க முடிவு செய்தார். இதில் ரயில்பாதை, நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் இந்த திட்டம் முடக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைத்து ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ரயில் பாதை பகுதியை ஆய்வு செய்யும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. ரயில்வே அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் நிலஅளவை அலுவலர்களால் ராமேஸ்வரம் ரயில் நிலையம் முதல் கரையூர், தெற்குகரையூர், ஜடாமகுட தீர்த்த கோயில், முகுந்தராயர் சத்திரம் வழியாக தனுஷ்கோடி வரை பழைய ரயில் பாதை சென்ற வழித்தடத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து, சர்வே செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

ஜடாமகுட தீர்த்த கோயில் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு மரங்கள் அடர்ந்த பகுதியில் அதிகாரிகள்  நேற்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே இருந்த ரயில்வே பாதையில் பல இடங்களில் தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகள் அடையாளம் காணப்பட்டு, அவைகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் விரைவில் அகற்றுவதற்கும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanushkodi ,rail track , rameshwaram,dhanushkodi,Southern railways,New Trains Line
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...