×

போரால் பாதித்துள்ள ஆப்கானில் மோடி கட்டும் நூலகத்தால் என்ன பயன்?: அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்

புதுடெல்லி: ‘போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் பிரதமர் மோடி கட்டித்தரும் நூலகத்தால் ஒரு பயனும் கிடையாது’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டல் செய்துள்ளார். அமெரிக்காவில் நேற்று முன்தினம் புத்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘‘ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கான பொறுப்பை  அண்டை நாடுகளான இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஏற்க வேண்டும். சம்மந்தமே இல்லாத நாடுகளுக்காக அமெரிக்கா கோடி கோடியாக செலவு செய்து வரும் நிலையில், பிரதமர் மோடி போன்ற உலக தலைவர்கள் அவர்களின் பங்களிப்பை எப்படி செய்கிறார்கள்? ஆப்கானில் நூலகம் கட்டுவதாக கூறுகிறார் பிரதமர் மோடி. போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் கட்டப்படும் இந்த நூலகத்தால் எந்த பயனும் இல்லை’’ என்று கிண்டலாக பேசியுள்ளார்.

இந்தியா பதிலடி: டிரம்பின் பேச்சுக்கு இந்தியா விளக்கம் தந்துள்ளது. இது பற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சமூக வளர்ச்சியின் ஒரு அங்கமாக ஆப்கானில் சிறு நூலகத்தை இந்தியா கட்டித் தருகிறது. அதோடு நின்றுவிடாமல், அந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறோம். ஜராஞ் முதல் டெலாராம் வரை 218 கிமீ தொலைவுக்கு சாலை அமைத்து தந்துள்ளோம். சல்மா அணை கட்ட உதவி உள்ளோம். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தையும் இந்தியாதான் கட்டித் தந்துள்ளது. மேலும், 116 புதிய சமூக வளர்ச்சித் திட்டங்களை தொடங்கியிருக்கிறது. ஆப்கனின் 31 மாகாணங்களில் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்பாசனம், குடிநீர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வெள்ளத் தடுப்பு, விளையாட்டு வசதி, நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ராணுவ உபகரணங்கள் வழங்குவதுடன், போர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்கனில் நிலையான, பாதுகாப்பான அரசு நிர்வாகம் அமைய முழு ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கிக் கொண்டிருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trump Kundal ,Afghanistan ,Modi ,US ,Pakistan , hampered, Modi, Afghanistan, library, US President, Trump ,Kendall
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...