×

ஜெயலலிதா சிகிச்சையில் சதி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ராமமோகனராவ், ராதாகிருஷ்ணனை எதிர் மனுதாரராக சேர்க்க கோரி மனு: நாளை விசாரணை நடக்கிறது

சென்னை: ஜெயலலிதா சிகிச்சையில் சதி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ராம மோகன ராவ், ராதாகிருஷ்ணனை எதிர்மனுதாரராக சேர்க்க கோரிய மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில்  நாளை விசாரணைக்கு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு தலைமை  செயலாளராக இருந்த ராமமோகனராவிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது, ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்வது தொடர்பாக, ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிர்வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இது குறித்து கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இதையடுத்து, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் சிகிச்சை விவரங்கள் குறித்தும், வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்தும் அரசிடம் உள்ள ஆவணங்களை கேட்டு ஆணையம் கடிதம்  எழுதி இருந்தது.  அதற்கு கிரிஜா வைத்தியநாதன், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக ராமமோகன ராவிடம் இருந்து எவ்வித கடிதத்தையும் அரசு பெறவில்லை என தெரிவித்திருந்தார்.   

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அது இந்தியாவில் இருக்கும் அனைத்து  டாக்டர்களையும் அவமதிப்பதாகும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவிற்கு இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும் என்று இதய சிகிச்சை நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால், கடைசி வரை  ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கும் அதுவும் ஒரு காரணம் என்று அப்போலோ மருத்துவ நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, இது தொடர்பாக,  ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தாது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த பிறகு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்னுக்குப்பின் முரணான சாட்சியம் அளித்துள்ளனர். எனவே ஜெயலலிதா சிகிச்சையில்  சதி நடந்து இருப்பது தெரிய வந்து இருப்பதால், ராதாகிருஷ்ணன், ராமமோகன ராவ் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்  முகமது ஜாபருல்லா கான் ஆணையத்தில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

அப்போலோ மனு மீதும் நாளை விசாரணை:அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மனு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. அந்த மனுவில், அப்போலோ டாக்டர்கள் வாக்குமூலம் ஆணையம் பதிவு செய்யும் போது ஏராளமான தவறு  நடக்கிறது. இது போன்று மருத்துவ சிகிச்சை தொடர்பான உண்மைகள் தவறாக எடுத்து கொள்ளப்படும். 21 துறைகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் மட்டுமே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை  ஆய்வு செய்ய முடியும். ஆனால், ஆணையர் சார்பில் மருத்துவர்கள் குழு அமைக்கப்படவில்லை. இதனால், அப்போலோ நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று அந்த மனுவில் கூறியுள்ளது.இந்த மனு மீதும் நாளை நீதிபதி  ஆறுமுகச்சாமி விசாரணை நடத்துகிறார். 10 அப்போலோ டாக்டர்கள் ஆஜராகின்றனர்:ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் நாளை மதியம் 2 மணியளவில் ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் சிறப்பு செயலாளராக இருந்த  சாந்தா ஷீலா நாயர் ஆஜராகின்றனர். நாளை மறுநாள் ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள் சாமி, தீபா கணவர் மாதவன், அப்போலோ டாக்டர்கள் ராமகிருஷ்ணன், சுந்தர், ராமகோபாலகிருஷ்ணன், மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சி சுந்தரம்,  பாபுமனோகர், சஜன் ஹெக்டே, அருட்செல்வன், சிவஞானசுந்தரம், டெக்னீசியன் காமேஷ் உள்ளிட்ட 13 பேரும், 4ம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramalinga Rao ,Jayalalithaa , Ramalinga Rao, accused , having, conspiracy,treatment of Jayalalithaa,
× RELATED ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்