×

புதுக்கோட்டையில் சுடுகாட்டிலும் நடைபெறும் மணல் கொள்ளை : மணல் சுரண்டப்படுவதால் சிதறி கிடக்கும் எலும்புக்கூடுகள்

புதுக்கோட்டை :புதுக்கோட்டை அருகே சுடுகாட்டிலும் மணல் கொள்ளை நடைபெறுவதால் ஆங்காங்கே எலும்பு கூடுகள் சிதறி கிடக்கின்றன. இதனால் பெரும் சங்கடத்திற்கு ஆளாகும் கிராம மக்கள் மணல் கொள்ளை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். மணல் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இன்றைய காலக்கட்டத்தில் மணல் கொள்ளை புதுக்கோட்டை மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. குடுமியான் மலை அருகே உள்ள சேரனூர் பகுதியில் உள்ளது வெள்ளாறு. வெள்ளாற்றில் கொள்ளை போகும் மண் வளத்தை சொல்லி மாளாது என வருந்துகின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆற்று மணலை இரவு பகலாக மாட்டு வண்டிகளில் அள்ளி விற்றவர்கள் ஏழு சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை. சுடுகாட்டில் மணலை சுரண்டுவதால் எலும்பு கூடுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் சுடுகாடே இல்லாமல் போகும் அவலம் உள்ளதாக ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி மக்கள். மணல் கொள்ளையை தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் அவர்கள் குறித்த விவரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினாலும் யாரும் கண்டுகொள்வதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த மணல் கொள்ளை தொடர்ந்தால் சுடுகாட்டில் இனி பிணங்களை புதைக்கவோ எரியூட்டவோ முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் தினமும் தொடரும் இந்த மணல் கொள்ளையை தடுத்து சுடுகாட்டை மீட்டு தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுடுகாட்டில் தொடரும் இந்த மணல் கொள்ளை குறித்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதியிடம் கேட்ட போது, மணல் கொள்ளையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதால் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இது குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் வந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sand ,Pudukottai , Pudukottai, loot, sand, flood, firearm, lupur, kaja storm
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி