×

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி டிபிஐயை முற்றுகையிட்ட 5 ஆயிரம் ஆசிரியர்கள் அதிரடி கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: ஊதிய முரண்பாடுகள் குறித்து இடைநிலை ஆசிரியர்கள், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்ட 5 ஆயிரம் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தொடக்க கல்வித்துறையில் கடந்த 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய வேறுபாடு நீடிக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு பதிவு மூப்பு இடைநிலை  ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தநிலையில், டிசம்பர் 23ம் தேதி சென்னையில் நீர் அருந்தாமல் உண்ணா விரதம் இருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்க நேற்று காலை பல்வேறு மாவட்டங்களில்  இருந்து ஆசிரியர்கள் சென்னைக்கு வந்தனர். இந்நிலையில், அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில், நேற்று மதியம் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சார்பில் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.  அதனால் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ  வளாகத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் முற்றுகை போராட்டம் நடத்த குவிந்தனர்.
இது குறித்து பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:ஒரு தகுதி, ஒரே பணி என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுவருகிறோம். பலகட்ட போராட்டத்துக்கு  பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்க கல்வி த்துறை இயக்குநர் நடவடிக்கை எடுப்பதாக அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.

ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 23ம் தேதி முதல் தொடர்  உண்ணா விரதம் இ ருக்கப் போவதாக அறிவித்தோம். இதற்கிடையே, ஊராட்சிப் பணியாளர்களுக்கு ஊதியம் முறைப்படுத்தி அரசு ஆணையிட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் செய்ய வேண்டும் என்று கேட்டோம். இதையடுத்து   பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில், ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதனால் நாங்கள் அறிவித்தபடி, கோரிக்கை நிறைவேறும் வ ரை நீர் அருந்தாமல் உண்ணா விரதம்  இருக்கும் போராட்டத்தை தொடர உள்ளோம். இவ்வாறு ராபர்ட் தெரிவித்தார். இதையடுத்து நேற்று மாலை 7 மணி அளவில் இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகம் நோக்கி வந்தனர். அங்கு பதற்றம் ஏற்படும் என்று கருதி டிபிஐ  வளாத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். டிபிஐ வளாகத்துக்குள் செல்லும்  அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டன. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் குவியத் தொடங்கினர். ஆனால் தயார் நிலையில் இருந்த போலீசார் அந்த ஆசிரியர்களை டிபிஐ வளாகத்துக்குள் செல்ல விடாமல் கைது செய்து ராஜரத்தினம்  ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teachers ,protesters ,EPDP , The negotiations, government, 5000 teachers ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...