×

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரியில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (74). இவர், சாகித்திய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். புற்றுநோயால்  பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை  11.45 மணியளவில் உயிரிழந்தார். பிரபஞ்சனின் மகன் பிரான்சில் வசிப்பதால், அவர் புதுச்சேரி  வந்த பிறகு திங்கட்கிழமை உடல் அடக்கம் செய்யப்படும் என  உறவினர்கள் தெரிவித்தனர். பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945-ல்  புதுவையில் பிறந்தவர்.  பிரபஞ்சனின்  இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை  முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது  வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராக தொடங்கினார். தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், விமர்சகராகவும்  விளங்கியவர். மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித  மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட பல நூல்களை  எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது. இவரது  மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

பிரபஞ்சன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள்,  பாடலாசிரியர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் மகாநதி, மானிடம் வெல்லும், சந்தியா, அப்பாவின் வேஷ்டி போன்ற எண்ணற்ற புதினங்களும், நேற்று மனிதர்கள், விட்டு விடுதலையாகி, இருட்டு வாசல், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் போன்ற சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளின் சிறந்த எழுத்தாளருக்கான விருதினையும் பெற்றுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும், அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ராமதாஸ் (பாமக நிறுவனர்): போர்க்குணம் மிக்க எழுத்தாளரும், எனது நண்பருமான பிரபஞ்சன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,  நடிகர் கமல்ஹாசன்  உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த தமிழ் எழுத்தாளரான பிரபஞ்சன் மறைந்தது தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சன் தனது தனித்துவமான தமிழ் நடையால், பல படைப்புகளை வழங்கி வாசிப்பு நிலையை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்று, பல்லாயிரம் வாசகர்களை மகிழ்வித்த பெரும் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்.
திராவிட இயக்கத்தை நட்புமுரணுடன் அணுகிய எழுத்தாளர் பிரபஞ்சன் அரசியல் ரீதியாக சில விமர்சனங்களை முன்வைத்த போதும், கலைஞரிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர் ஆவார். ஓர் இலக்கியவாதியான தன்னிடம் கலைஞர் வெளிப்படுத்திய அன்பை பல மேடைகளில் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்.
அண்மைக்காலமாக உடல்நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக் கும், தமிழ் இலக்கிய வாசகர்களுக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சனின் தமிழ்த் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இறந்த பிறகு வாழப்போகிறார்: கவிஞர் வைரமுத்து

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை: நா.பார்த்தசாரதிக்குப் பிறகு பண்டித மரபு தாண்டிப் படைப்பிலக்கியத்திற்கு வந்தவர் பிரபஞ்சன். கள்ளுக்கடை வைத்திருந்த தந்தைக்குப் பிறந்தவர் கவிதைக்கடை வைத்ததுதான் இலக்கிய ஆச்சரியம். சமரசம் இல்லாத படைப்பாளி அவர். மானுட யாத்திரையைத் தடுக்கும் பிற்போக்குக் கோடுகள் அகற்றப்பட வேண்டும் அல்லது அகலப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரபஞ்சனின் இலக்கியக் கொள்கை. இருக்கும்போது செத்துச் செத்து இறந்தபின் வாழ்கிறவன்தான் எழுத்தாளன். உடலென்ற கூடு உடைந்தபிறகும் என் எழுத்தில் நான் உயிரோடிருப்பேன் என்ற சின்னத்தனமான ஒரு கர்வம்தான் எழுத்தாளனை எழுத வைக்கிறது. அதே நம்பிக்கையில் 73 வயது வரையில் இயங்கி வந்த பிரபஞ்சன் இதோ இப்போது இறந்துவிட்டார்; அவரது எழுத்து வாழப்போகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,leaders ,Prabanjan ,death , Political party leaders ,condemned ,death ,writer Prabanjan
× RELATED தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த...