×

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.20 லட்சம் இந்திய பணம் கடத்தல்: பெண் பயணி கைது

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 32 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் செல்வதற்காக வந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய சூட்கேசை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அந்த சூட்கேசில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் ரூ.500 நோட்டு கட்டுகளாக ரூ.20 லட்சம் இந்திய பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண் பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், இந்த பணத்தை சிங்கப்பூருக்கு எடுத்து செல்லும்படி ஒருவர் என்னிடம் கொடுத்தார்.

மேலும் பணத்தை சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுத்து விட்டால் எனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தருவதாக கூறினார். பணத்துக்கு ஆசைப்பட்டு நான் இந்த பணத்தை எடுத்துச் செல்கிறேன் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், பெண் பயணி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், விமான நிலையத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கடத்தல் பெண் பயணியை கைது செய்து, நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

வெளிநாட்டிற்கு பணத்தைக் கடத்துபவர்கள், இந்திய பணத்தை வெளிநாட்டு பணமாக மாற்றி, அதன் பின்பு தான் கொண்டு செல்வார்கள். ஆனால் இந்த பெண் இந்திய பணமாகவே எடுத்துச் சென்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக பறிமுதல் செய்யப்படும் பணத்தையும், கடத்தல் பயணியையும் பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத்துறையிடம் ஒப்படைப்பார்கள். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், அதிலும் கைப்பற்றப்பட்ட பணம் இந்திய பணம் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர் என்று கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.20 லட்சம் இந்திய பணம் கடத்தல்: பெண் பயணி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,Indigo Airlines ,Singapore ,Chennai International Airport ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்