சென்னை: எந்த சூழ்நிலையிலும் மேகதாது குறுக்கே அணை கட்ட விட மாட்டோம் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக மின் ஆய்வுத் துறை சார்பில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு விழா தி.நகரில் நேற்று நடந்தது. விழாவுக்கு, மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். எரிசக்தி துறை முதன்மை செயலர் முகமது நசிமுத்தின், மின்வாரிய மேலாண் இயக்குனர் தர், எரிசக்தி திறனூக்க செயலக செயலாளர் பங்கஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், வருங்கால சந்ததியினருக்கு எரிசக்தி ஆதாரங்கள் தொடர்ந்து கிடைக்க எடுக்க வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பேசினர். இதை தொடர்ந்து, அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு மின்சாரத்தை சிக்கனமாக எப்படி சேமிப்பது என்பது குறித்து ஆண்டுதோறும் ஒரு வாரம் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, மின்சார சிக்கன வாரம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு மின்சேமிப்பு குறித்து ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் மாதத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை சேமித்தால் போதும் ஆண்டுக்கு 100 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். மின்சேமிப்பை பொதுமக்கள் கடைபிடித்தால் மட்டுமே எதிர்கால சந்ததிகளுக்கு மின்சாரத்தை மிச்சப்படுத்தி கொடுக்க முடியும். மேகதாது குறுக்கே அணை கட்டப்படுவது மின்சாரம் தயாரிப்பதற்காகவே என கர்நாடகா அமைச்சர் கூறி வருகிறார்.
ஆனால், அங்கு அணை கட்ட எந்த சூழலிலும் தமிழக அரசு ஒத்துக்கொள்ளாது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தொடர்ந்து கேட்டு பெறுவோம். மேகதாது அணை கட்ட எந்த காலத்திலும் தமிழக அரசு துணை போகாது. அதற்காகதான் சுற்றுச்சூழல் அனுமதியையும் வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தினமும் முழங்கி கொண்டிருக்கின்றனர். உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு 8 மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களிடம் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, அதிமுகவில் யார் தவறு செய்தாலும் ஏற்று கொள்ளப்பட மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் 2 லட்சம் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. குக்கிராமங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதுவும் மிக விரைவில் கொடுக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி