×

கூடலூர் அருகே தொடரும் காட்டு யானைகள் தொல்லை : பயிர்கள் சேதம், வனத்துறை கப்சிப்

கூடலூர்: கூடலூர் அருகே வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களின் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. ஆள் பற்றாக்குறையை காட்டி வனத்துறை யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் நகராட்சியின் 21வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் மலையடிவாரத்தை ஒட்டிய நிலங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, மா, இலவம் மரங்களையும், மானாவாரி நிலங்களில் மொச்சை, உளுந்து, அவரை பயிர்களையும் சாகுபடி செய்துள்ளனர். இந்த விவசாய நிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளட்ட வனவிலங்குகள் உள்ளன.

வனப்பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகள், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இது குறித்து  விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் வனத்துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டி ஒருசில இடங்களில் மட்டும் அகழிகள் அமைத்தனர். தற்போது அகழிகள் சேதம் அடைந்து மண்மேவி உள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டி உள்ள பளியங்குடி, பாப்பானோடை, வாழ்த்துப்படுகை, வேலங்காடு, கொள்ளுகவுடர் முடக்கு பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம் இந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், நாயக்கர்தொழு பகுதியில் பெருமாயி என்ற விவசாயின் இலவ மரங்களையும், கடந்த வெள்ளிக்கிழமை வெட்டுக்காடு சிவில்ராம் படுகை பகுதியில் உள்ள மாயாண்டி என்பவரின் வாழை தோட்டத்தில் உள்ள வாழை மரங்களையும் சேதப்படுத்தியது.

நேற்று முன்தினம் இரவு பளியங்குடி பகுதியில் உளுந்து பயிர்செய்துள்ள மானாவாரி நிலங்களின் வழியாக சென்ற யானைகள் உளுந்தம் செடிகளை நாசம் செய்துள்ளது. தொடர்ந்து யானைகள் இப்பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒருமாதமாக இப்பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. எனவே இப்பகுதி விவசாயத்தைக் காப்பாற்ற விவசாய நிலங்களைச் சுற்றி அகழியோ, மின் வேலியோ அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodalur , Cuddalore, Wild Elephants, Crops, Forests
× RELATED தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லை...