×

கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்த நிறைமாத கர்ப்பிணி மாயம்

சென்னை: பிரசவத்திற்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி லால்முகமத் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர் (26). இவரது மனைவி காயத்ரி (24), நிறைமாத கர்ப்பிணி. கடந்த 15ம் தேதி இரவு சுதாகர் தனது மனைவியை பிரசவத்திற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், இன்று அல்லது நாளை குழந்தை பிறக்கும் என்று நேரம் குறித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரசவ வார்டில் மனைவியை சேர்த்த சுதாகர், அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், இரவு வீடு திரும்பினார்.

மறுநாள் காலை, மனைவியை பார்க்க சுதாகர் வந்தபோது, மனைவி காயத்ரி மருத்துவமனையில் இருந்து மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது. உடனே சுதாகர் மருத்துவமனை வளாகம் முழுவதும் தனது மனைவியை தேடியும், அவர் கிடைக்கவில்லை. உறவினர்கள் வீட்டிற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவியை காணவில்லை, என திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளிதார்.

அதன்படி,  போலீசார் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று மாயமான கர்ப்பிணியை தேடி வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பாதுகாப்பு உள்ள அரசு மருத்துவமனையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kasturba Gandhi Hospital , Kasturba Gandhi Hospital, Pregnant missing
× RELATED கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில்...