×

நிலத்தடி நீருக்கான கட்டணம் ஜூன் மாதம் முதல் அமலாகிறது: தொழிற்சாலை, வீடுகளின் பயன்பாட்டுக்கு கெடுபிடி

புதுடெல்லி: நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக, நாடு முழுவதும் ‘நீர் பாதுகாப்பு கட்டணம்’ முதல் முறையாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இக்கட்டணத்தை, தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி அதிக அளவு தண்ணீரை பயன்படுத்தும் தனி நபர்களும் செலுத்த வேண்டும். இதற்காக பல்வேறு கெடுபிடிகளுடன், திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ளது. மத்திய நீர் வளத்துறையின் நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக திருத்தப்பட்ட புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக இனி ‘நீர் பாதுகாப்பு கட்டணம்’ விதிக்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

முதல் முறையாக விதிக்கப்படும் ‘நீர் பாதுகாப்பு கட்டணம்’ அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது. இதன்படி, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை ஊறிஞ்சி பயன்படுத்தும் அனைவரும் இக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  நிலத்தடி  நீரை எடுக்கும்  தொழிற்சாலைகள், தண்ணீர் கேன் தயாரிப்பு நிறுவனங்கள், சுரங்க நீர் வடிகால் நிறுவனங்கள் அனைத்தும் கண்டிப்பாக தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அப்படி பெறும்போது, அவர்கள் பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு நீர் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் நீர் எடுக்கப்படும், அந்த இடம் நீர் வளம் மிக்கதா, அல்லது நீர் பற்றாக்குறை உள்ள பகுதியா என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதிக அளவு நீரை உறிஞ்சி எடுத்தாலும், நிலத்தடி நீர் வற்றிய பகுதிகளில் நீரை எடுத்தாலும் அதிகளவு கட்டணம் விதிக்கப்படும். இதற்காக, பாதுகாப்பான பயன்பாடு, அதிகளவு இயற்கை வளத்தை பயன்படுத்துதல் என்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, 20 கன மீட்டர் வரை (ஒரு கன மீட்டர் = 1,000 லிட்டர்) நீர் எடுத்தால் அது  ‘பாதுகாப்பான’ பிரிவின் கீழ் வரும். இதற்கு ஒரு கன மீட்டருக்கு ரூ.3 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஒரு நாளைக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட கன மீட்டர் நீர் எடுத்தால், அதிகமாக இயற்கை வளத்தை பயன்படுத்தும் பிரிவின் கீழ் வந்துவிடும். அப்படி வரும்போது ஒரு கன மீட்டருக்கு கூடுதலாக ரூ. 100 செலுத்த வேண்டும். இதுதவிர தொழில் நிறுவனங்களில் மழை நீர் சேகரிப்பு, நீர் பயன்பாட்டை கண்டறியும் டிஜிட்டல் அளவீடு கருவிகள் பொருத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கும் கட்டணம்: இதுமட்டுமின்றி, வீடுகளின் பயன்பாட்டுக்கும் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி நபர்  வீடுகளில் போட்டிருக்கும் போர்வெல் குழாயில் இருந்து நீரை  வெளியற்றும் குழாயின் அளவு 1 அங்குல டயாமீட்டர் அளவிற்கு மேல் இருந்தால், தடையில்லா சான்று பெற வேண்டும்.  

அவர்கள் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும்.  இது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இது குறித்து, மத்திய நிலத்தடி நீர் ஆணைய தலைவர் நாயக் கூறுகையில், “நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான முயற்சியாக இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானத்தை கொண்டு  நிலத்தடி நீர் மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இக்கட்டணங்கள் தொழில்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டது”என்று தெரிவித்துள்ளார்.

* உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா.
* ஓராண்டுக்கு 253 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இது உலக நிலத்தடி நீர் எடுத்தலில் 25 சதவீதமாகும்.
* எதிர்வரும் காலத்தில் தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போர் நடக்கும் சூழல் இருப்பதாக எச்சரிக்கைகள் வெளியாகி இருக்கும் நிலையில், நிலத்தடி நீரை பாதுகாக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி இது என மத்திய அரசு கூறியிருக்கிறது.

அதிகம் பயன்படுத்துவது யார்?
இந்தியாவில் நிலத்தடி நீர், விவசாய  நீர் பாசனத்திற்கே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 228 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்காக செலவிடப்படுகிறது. இது, நாட்டின் ஓராண்டு நிலத்தடி நீர் எடுப்பதில் 90 சதவீதமாகும். மீதமுள்ள 10 சதவீதம் அதாவது 25 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் குடிப்பதற்கும், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தேவைகளுக்கும் எடுக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் எடுக்கும் தண்ணீரின் அளவு, ஓராண்டில் ஊறிஞ்சப்படும் தண்ணீரில் அளவில் 5 சதவீதம் மட்டுமே என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

விவசாயத்துக்கு விலக்கு
புதிய நெறிமுறைகளின்படி, விவசாய பயன்பாட்டுக்கு, மின்சாரமின்றி நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள், 1 அங்குல டயாமீட்டருக்குள் உள்ள குழாய் மூலமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் வீடுகள், ஆயுதப் படைகளுக்கு பணிகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு திட்டங்களுக்கு தண்ணீரை பயன்படுத்தும் போது,  ஒரு கன மீட்டருக்கு 1 முதல் 2 வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கும் தனியாக அரசிடம் இருந்து இது குடியிருப்பு திட்டம் என்பதற்கான தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ground water, fees, factory, houses
× RELATED இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த...