×

செம்மஞ்சேரி எழில்முக நகரில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம், 200வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவகர் நகர், காந்தி நகர் பகுதியில் ஏராளமான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையான எழில்முக நகர் செல்லும் சாலை சுமார் 4 கிமீ தூரத்துக்கு சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளனர். ஆனால் இந்த சாலையின் ஒரு பகுதி மாநகராட்சியிலும், மீதமுள்ள பகுதி தாழம்பூர் ஊராட்சியிலும் இருப்பதால், சாலையை சீரமைக்க யாரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர்.

இதனால் யாரிடம் சென்று முறையிடுவது என்று புரியாமல் மக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் எழில்முக நகர் சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடத்துவதற்கு பதாகைகளுடன் ஊர்வலமாக வந்தனர். தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘உங்கள் பிரச்னை குறித்து, அதிகாரிகளிடம் விளக்கமாக எடுத்து கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என, போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சாலை 4 கி.மீ தூரம் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக பஸ் வசதியும் இல்லை. இப்பகுதியில் சிலர் கழிவுநீரை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகின்றது. சுகாதார சீர்கேட்டால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இனியாவது அதிகாரிகள் எல்லை பிரச்னையை காரணம் காட்டாமல் சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Seemanjeri ,road ,city , Seemanjeri,demanding,revamp road,city
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...